- அமைதி என்பதும் தியானம் என்பதும் தவம் என்பதும் ஒன்றுக்கொன்று உரிமைத் தொடர்புடைய உறவுச் சொற்களாகும்.
- தியானம் என்பது நம்மையும் நமது போக்குகளையும் நேர்முறையில் நெறிப்படுத்திடும் அரும்பணியைச் செய்கிறது.
அமைதியும் ஆனந்தமும் ததும்பும் வாழ்க்கையை அன்றாடம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்.
வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் வேண்டுமென்றால் தவ வாழ்க்கை வாழவேண்டும்! என்கிறார்கள். இந்த உலகத்தில் நிலைத்த அறங்களாகவும், நிலைத்து நிற்கவேண்டிய அறங்களாகவும் வள்ளுவர் குறிப்பிடுவது, 'தானம்', 'தவம்' ஆகிய இரண்டை மட்டுமே. இவ்விரண்டையும் மறைந்து போகாமல் காப்பதற்குத், தொடர்ந்த மழைவளத்தை உடை யதாக உலகம் இருக்க வேண்டும் என்கிறார்.
"தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்"
'தானம்' அடுத்தவர் நலத்தை முன்னிறுத்தி செய்யப்படுகிற அறமாகும்; 'தவம்' தன்னை முன்னிலைப்படுத்தி இயற்றுகிற அறப்பயிற்சி ஆகும். மழைவளம் குன்றாமல், உலகச் செழிப்புக் குறையாமல் இருந்தால் மட்டுமே தானம் செய்வதும், தவம் இயற்றுவதும் ஆகிய அறங்கள் தொய்வில்லாமல் நடைபெறும்.
ஒருகாலத்தில் உலக வாழ்வின் இன்பங்கள் அனைத்தையும் வெறுத்துக், குடும்பத்தைத் துறந்து, காடுகளுக்கும் வனங்களுக்கும் மலைகளுக்கும் சென்று, கனிகிழங்குகளை உண்டு, பசிதாங்கி, உடலியல் வலிகளைப் பொறுத்து, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, கடுமையான முறையில் தியானத்தில் ஆழ்ந்திருப்பதே தவம் என்று எண்ணியிருந்தார்கள். தவம் என்பது துறவு நெறியில் இருக்கும் சாமியார்களுக்கே உரியது என்றும் கருதப்பட்டது. ஆனால் இல்லறத்தில் வாழ்வோர்க்கும் தவம் வாய்க்கும் என்பது வள்ளுவச் சிந்தனை ஆகும்.
"உற்றநோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு"
இக்குறளில் திருவள்ளுவர், 'தமக்கு வருகிற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குத் துன்பம் இழைக்காமல் இருப்பதுமே தவம்' என்கிறார். வாழும் இல்லற வாழ்விலும் வலி பொறுத்தலே வாழ்க்கை என்கிறார் திருவள்ளுவர். இவ்வாறு பொறுத்துக் கொள்வது அல்லது தாங்கிக் கொள்வது ஆகியவற்றை 'நோன்பு இருத்தல்' அல்லது 'விரதம் இருத்தல்' என்று நாம் ஆன்மீக அடிப்படையில் கூறுவோம். மத சம்பிரதாயங்களைத் தாண்டியும், நமக்கு ஏற்படும் இடையூறுகளையும், வலிகளையும் மன உறுதியோடு தாங்கிக் கொள்ளும் வல்லமை நமக்கு வாய்த்துவிட்டால் உண்மையில் அதுவே தவம் ஆகும். இவ்வகை தவத்தைத் துறவறவாசிகள் மட்டுமல்லாது, இல்லறவாசிகளும் எளிதில் கடைப்பிடிக்க முயலலாம்.
தவத்தினால் கிடைக்கக் கூடிய அடிப்படையான பலன் எதுவென்று திருவள்ளுவரைக் கேட்டால், ' இது அது என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் கூறிவிட முடியாது' என்கிறார்.
"வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்"
அதாவது, இவர் அவர் என்று வேறுபாடு இல்லாமல், இதுதான் வேண்டும்! அதுதான் வேண்டும்! என்று வித்தியாசம் இல்லாமல், யார் எதுவேண்டுமென்று தவம் இயற்றத் தொடங்கினாலும் அவர்கள் வேண்டியது வேண்டியபடி தவத்தினால் கிடைக்கும் என்பது வள்ளுவர் தரும் உறுதிப்பாடு. தவம் தவமாக இருக்கவேண்டும்; அதுபோதும். பலன்கள் இல்லறத்தார்க்கும் உண்டு; துறவறத்தார்க்கும் உண்டு.
தவம் இயற்றுவதற்கு அடிப்படைத் தேவை அமைதி. நமது உள்ளமும் அமைதியாக இருக்க வேண்டும்; நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் அமைதியாக இருக்க வேண்டும். நம்முடைய உள்ளமாகிய அகத்திலும் சரி. புறமாகிய வெளி உலகத்திலும் சரி ஒரே இரைச்சல் மயமாகவே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இடைவேளை இல்லாத பரபரப்பில் நமது உள்ளும் புறமும் சிதைந்து கொண்டிருக்கும்போது அமைதியை முதலில் வரவழைப்பது எப்போது?. முதலில் அமைதி வந்தால்தானே பிறகு தவம் இயற்ற முடியும்!; அத் தவத்தை வென்றெடுத்த பிறகுதானே வேண்டிய வெற்றிச் சாதனைகளை எட்டிப் பிடிக்க முடியும். இந்த உலகில் சாதிக்கிறவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், சாதிக்க முடியாமல் பின்தங்குகிறவர்கள் எண்ணிக்கை கூடுதலாகவும் இருப்பதற்கான காரணத்தை ஆராய்கிறார் திருவள்ளுவர். ஏன் இல்லாதவர்கள் பலராகவும் இருக்கிறவர்கள் சிலராகவும் இருக்கிறார்கள் என்றால், வலிதாங்கும் நோன்பை மேற்கொண்டு தவமியற்றி வெல்பவர்கள் சிலராகவும், மேற்கொள்ள முடியாமல் தோற்பவர்கள் பலராகவும் இருக்கின்றனராம்.
"இலர்பலராகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்"
தவமியற்றுதல் என்பதே தமக்கு வரும் எல்லாத் தொல்லைகளையும் பொறுமையினால் வெற்றிகாண்பதும், அவற்றிலிருந்து வெளியேறுவதும், தொல்லைகளற்ற மனத்தை அமைதியுடன் ஒருநிலைப்படுத்தலும், பிறகு வேண்டியன கிட்ட வேண்டியாங்கு தியானித்தலும் ஆகும்.
ஓர் அடர்ந்த காட்டிற்குள் ஒரு விறகுவெட்டி சென்றான். செல்லும் வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவி கண்களை மூடித் தியானம் பண்ணிக் கொண்டிருந்தார். விறகு வெட்டி அவர்முன் சிறிதுநேரம் நின்று அவரையே பார்த்து கொண்டிருந்தான். தன்னை யாரோ நின்று பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த துறவி கண்களைத் திறந்து கையில் கோடரியோடு நின்றிருந்த விறகுவெட்டியைப் பார்த்துப் புன்னகைத்தார். அவனிடம் துறவி பேசினார், "விறகு வெட்டியே நீ அன்றாடம் இங்கு வந்து, ஒரு தலைச்சுமை விறகை எடுத்துச் சென்று ஊரில் விற்றால் உனக்கு எவ்வளவு கிடைக்கும்?". "இந்த ஒருநாளைப் பசியில்லாமல் கடத்துவதற்கு இது பயன்படும்! அவ்வளவுதான்!" என்றான் விறகுவெட்டி." சரி!. இன்று முதல் நான் சொல்கிறபடிக் கேட்டால், நாள்தோறும் நீ இங்கு வந்துபோக வேண்டிய அவசியம் இருக்காது; மரங்களை வெட்டி வனங்களை அழிக்க வேண்டிய நிலைமையும் இருக்காது!" என்றார் துறவி. " சரி! நீங்கள் சொல்லுங்கள்! சொல்கிறபடிக் கேட்கிறேன்" என்றான் விறகுவெட்டி. "இந்த வழியே கிழக்குப் பக்கமாகக் கொஞ்ச தூரம் செல்! அங்கே ஒரு செம்புச் சுரங்கம் இருக்கிறது; ஒரு தலைச்சுமை அளவு வெட்டிக்கொண்டு சென்றால், அதனை விற்று ஒருவாரத்திற்குச் சாப்பிடலாம்! செல்!" என்றார் துறவி. அவ்வழியே சென்று செம்பை வெட்டி, ஊருக்குள் சென்றான் விறகுவெட்டி.
முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
அடுத்து ஒருவாரம் கழித்து வந்து துறவிமுன் நின்றான் விறகுவெட்டி. "நீ கடந்த முறை சென்ற செம்புச் சுரங்கத்தைத் தாண்டி, இன்னும் கொஞ்ச தூரம் செல்! அங்கே ஒரு வெள்ளிச் சுரங்கம் இருக்கிறது; அதில் ஒரு தலைச்சுமை அளவுக்கு வெட்டி எடுத்து ஊருக்குள் சென்று விற்றால் ஒரு மாதகாலத்திற்குச் சாப்பிடலாம்" என்றார் துறவி. அப்படியே செய்த விறகுவெட்டி, அடுத்து ஒருமாதம் கழித்துக் காட்டிற்குள் வந்து துறவிமுன் நின்றான். இப்போது துறவி அவனிடம், " கடந்த முறை நீ சென்ற வெள்ளிச் சுரங்கத்தைத் தாண்டிக் கொஞ்ச தூரம் சென்றால், அங்கே தங்கச் சுரங்கம் இருக்கும்; வெட்டியெடுத்துச் செல்!; அடுத்து ஆறு மாத காலத்திற்கு இங்கு நீ வரவேண்டிய தேவை இருக்காது!" என்றார்.
அடுத்து ஆறு மாதங்கள் கழித்து விறகுவெட்டி துறவிமுன் வந்து நின்றபோது, "தங்கச் சுரங்கம் தாண்டியும் செல்! அங்கே வைரச் சுரங்கம் உனக்காக காத்திருக்கிறது; அது உனக்கு ஒரு வருட காலம் இந்தப்பக்கம் உன்னை வரவிடாமல் பார்த்துக்கொள்ளும்" என்றார் துறவி. அடுத்து ஓராண்டு கழித்துத், துறவிமுன் வந்து விறகுவெட்டி நின்றபோது, அவனை ஏற இறங்கப் பார்த்த துறவி, " இப்போது வைரச் சுரங்கம் தாண்டியும் கொஞ்ச தூரம் சென்று தேடிப்பார்!; எனக்குக் கிடைத்த பொக்கிஷம் உனக்கும் கிடைக்கலாம்!; அதைக்கொண்டு நீ உன் வாழ்க்கையை நிரந்தரமாக அனுபவிக்கலாம்!" என்று விறகுவெட்டியை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைத்தார் துறவி.
உள்ளே காட்டிற்குள் சென்ற விறகுவெட்டி, வைரச் சுரங்கத்திற்கும் மேலான பொக்கிஷம்! அதுவும் துறவிக்குக் கிடைத்த பொக்கிஷம்! எதுவாக இருக்கும்?. தேடியலைந்து, களைத்து, நடுக்காட்டில், அடர்வனத்தில், ஓர் அமைதியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே அமர்ந்தான். அவனையறியாமலேயே கண்களை மூடித் தியானத்தில் ஈடுபடத் தொடங்கினான். ஆம் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்து விட்டான்; அது தியானம் என்னும் பொக்கிஷம்! செலவழிக்கச் செலவழிக்க ஆயுள் முழுவதும் தீராத பொக்கிஷம்!. அங்கேயே வேண்டியதைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டான்.
அமைதி என்பதும் தியானம் என்பதும் தவம் என்பதும் ஒன்றுக்கொன்று உரிமைத் தொடர்புடைய உறவுச் சொற்களாகும். குழப்பம், பரபரப்பு, மனக்கூச்சல் போன்றவை இவற்றிற்கு எதிரான மனோ நிலைகள் ஆகும். குழப்பமில்லாத தெளிவு, பரபரப்பில்லாத அமைதி, மனக்கூச்சல்களற்ற தியான நிலை இவை வாய்த்துவிட்டால் வாழ்தலே தவம்போல ஆகிவிடும். ஒரு காலத்தில் அமைதியைத் தேடி அமைதியான சூழல் நிலவும் இடங்களுக்கு மனிதர்கள் சென்றனர். ஆனால் இன்றோ அப்படிப்பட்ட அமைதியான இடங்கள் அமையாவிட்டாலும், மனப்பயிற்சிகள் மற்றும் எளிய உடற்பயிற்சிகள் மூலமாக அமைத்துக்கொள்ளும் தியான வித்தைகளை மனிதர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அலைபாயும் கடல், ஓசைமயமாக இருப்பதுபோல, அலைபாயும் எண்ணங்கள் கொண்ட மனமும் ஓசைமயமாகவே திகழ்கிறது. மனத்தின் அலைபாய்தல் அடங்காத வரை, ஓசை ஒடுங்காத வரை, தியானம் சாத்தியப்படுவதே இல்லை.
தியானம் என்பது மனத்தின் எண்ணங்களை ஒருங்கிணைத்துக், கூர்மைப்படுத்தி, விழிப்புணர்வைப் பிரகாசப்படுத்துகிற பயிற்சியாகும். இதன் மூலமாக மனமும் உடலும் ஒத்திசைவில் இயங்கத் தொடங்குகின்றன. மனமும் உடம்பும் குறிப்பிட்ட இலக்கு நோக்கி விழிப்புணர்வோடு இயங்குவதற்குத் தியானம் பெருமளவில் கைகொடுக்கிறது. மனத்தில் வீண் குழப்பங்களால் ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைத்திடும் அமைதிப் பணியையும் தியானம் செய்கிறது. தொடர்ந்து மேற்கொள்ளப்பெறும் தியானப்பயிற்சி, நமது நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. தேவையற்ற கவலைகளிலும் பிரச்சினைகளிலும் ஆழ்ந்துபோய் அவற்றிலேயே உழன்று கொண்டிருக்கும் மனத்தின் அவல நிலையையும் தியானம் மாற்றுகிறது. ஒட்டுமொத்தத்தில், தியானம் என்பது நம்மையும் நமது போக்குகளையும் நேர்முறையில் நெறிப்படுத்திடும் அரும்பணியைச் செய்கிறது.
இந்த உலகத்தில் தனிமனிதர் தொடங்கிப், பெரும்பெரும் நாடுகளின் தலைவர்கள் வரை அமைதியையே பெரிதும் விரும்புகின்றனர். நாடுகளுக்கிடையே வளரும் பகை எண்ணங்களும் போட்டி பொறாமைகளும் அவற்றிற்கிடையே சண்டைகளை உருவாக்கி, அமைதியின்மைக்கு வழி வகுத்துவிடுகின்றன. அமைதியின்மையில் தத்தளிக்கிற நாடுகள், என்றும் எத்துறையிலும் வளர்ந்த நாடுகளாகப் பரிமளிக்கப் போவதில்லை. அதைப்போலத்தான் ஒவ்வொரு தனிமனிதனும். அமைதியின்மையில் தடுமாறுகிற எவரும் சாதனை மனிதராகச் சரித்திரம் படைப்பதில்லை. எல்லா நிலைகளிலும் தமக்கு உள்ளும் புறமுமாக அமைதியே நிலவ வேண்டும் என்று, முயல்கிறவர்கள் உண்மையான தவ வாழ்விற்குச் சொந்தக்காரர்கள். அமைதி தவழும் உள்ளமும் இல்லமும் உண்மையான தவக்குடில்கள்.
தொடர்புக்கு: 9443190098