சிறப்புக் கட்டுரைகள்
null

தாய்ப்பால் தெய்வப்பால்

Published On 2025-08-08 16:43 IST   |   Update On 2025-08-08 16:48:00 IST
  • குழந்தையினுடைய தேவைக்கு ஏற்றது போல் தாய்ப்பாலில் சத்துகள் சுரப்பது அறிவியல் உண்மை.
  • தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று தவறான ஒரு எண்ணம் உள்ளது.

குழந்தை பிறந்து, நஞ்சுக்கொடி பிரிந்த அடுத்த நிமிடம் தாயின் மார்பில் தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து விடும்.

முதல் கர்ப்பம எனில், கர்ப்பம் உறுதியானது முதலே (அதாவது முதல் மூன்று மாதங்களிலேயே) தாயின் மார்பில் பால் சுரப்பிகளின் வளர்ச்சி தொடங்கிவிடும்.

அது போலவே ஒரு சுவாரசியமான விஷயம். என்னவென்றால் கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும்போது பார்த்தால் குழந்தை "எப்படி தாயிடம் உறிஞ்சி குடிக்க வேண்டும்?!" என்பதை பயிற்சி செய்து கொண்டே இருக்கும்.

குட்டி போட்டு பாலூட்டும் மேமல்ஸ் என்று சொல்லப்படும் பாலூட்டிகள் பிரிவில் மனித குழந்தை தான் மிகவும் பாவமாக பார்க்கப்படுகிறது.

பிறந்தது முதல் கிட்டதட்ட நான்கு மாதங்கள் வரை உணவை தேடிச் சென்று பெற முடியாத நகர முடியாத ஒரு ஜீவனாக இருப்பது மனித குழந்தைதான்.

எனவே அது தாய்ப்பாலையே நம்பி இருக்கிறது என்று கூறலாம்.

தாய்ப்பாலில் என்னென்ன சத்துகள் உள்ளன?

கார்போஹைட்ரேட்

புரோட்டின்

கொழுப்பு சத்து

விட்டமின்கள்

எதிர்ப்பு சக்தி மருந்துகள்

நீர்

நொதிகள், ஹார்மோன்கள்

நிறைந்தது தாய்ப்பால்.

குழந்தையினுடைய தேவைக்கு ஏற்றது போல் தாய்ப்பாலில் சத்துகள் சுரப்பது அறிவியல் உண்மை. குழந்தை வளர வளர தாய்ப்பாலில் உள்ள சத்துகளும் மாறிக்கொண்டே இருக்கும்.

குழந்தைகளுக்கு தேவைப்படும் அளவு எவ்வளவு?

பிறந்த குழந்தையினுடைய தாய்ப்பால் தேவை ஒரு முறைக்கு 10 மில்லி அளவு தான்.

அது படிப்படியாக அதிகரித்து, ஒரு முறைக்கு 150-200 மிலி வரை தாய் பால் கொடுக்க வேண்டிய தேவை இருக்கலாம்.

எந்த நிலை தாய்ப்பால் கொடுக்க வசதியானது? சரியானது?

குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை தாய் சவுகரியமாக சாய்ந்து அமர்ந்து கொள்ளலாம். பிறகு தாயும் குழந்தையும் படுத்துக் கொள்ளலாம். தாய்க்கு ஏற்ற வசதியான சூழ்நிலை தான் தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்றது. ஒருமுறை 20 நிமிடங்கள் தேவைப்படும், ஒரு நாளில் பத்து பதினைந்து முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டி இருக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவு:

பால், பழச்சாறுகள், சூப்புகள் போன்றவற்றை நிறைய அருந்த வேண்டும். ஒவ்வொரு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும் ஏதாவது அருந்திவிட்டு பிறகு தாய்ப்பால் கொடுப்பது நல்லது.

அது தவிர உணவிலும் கடுமையான பத்திய முறைகளை விட்டு எல்லா காய்கறிகளையும் தாய்க்கு சேர்த்து நல்ல ஒரு சரிசமமான உணவை கொடுப்பது மிகவும் அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது ஏதாவது மாத்திரைகளை சாப்பிட வேண்டுமா? புரோட்டின் பவுடர் சாப்பிட வேண்டுமா?

கால்சியம் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகளை பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தாயின் உடல் நலத்தை பாதுகாப்பதோடு குழந்தைக்கு தேவையான கால்சியத்தை தருவதற்கும் உதவும். டிஎச்ஏ உள்ள மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் குழந்தையினுடைய மூளை வளர்ச்சிக்கும் அது உதவியாக இருக்கும்.

தாய்ப்பால் சுரப்பிற்கும் சத்திற்கும் தேவையான புரோட்டின் மாவுகளை உங்கள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.

பிரசவமானதும் முதலில் சுரக்கும் சீம்பால் அல்லது கொலஸ்ட்ரம் நல்லதா? குழந்தைக்கு கொடுக்க வேண்டுமா? குழந்தை பிறந்ததும் தாய்க்கு முதலில் சுரக்கும் நீர் போன்ற திரவம் கொலஸ்ட்ரம் எனப்படுகிறது. இது ஏராளமான எதிர்ப்பு சக்தி இம்யுனோ குளோபுளின்களை கொண்டுள்ளது. அதனால் இதை கட்டாயம் குழந்தைக்கு புகட்ட வேண்டும். பல வீடுகளில் குழந்தைக்கு கொடுக்காமல் கீழே பிழிந்து விட்டு விடுவார்கள். அது மிகவும் தவறான பழக்கமாகும்.

தாய்ப்பால் சுரக்கா விட்டால் என்ன காரணம்?

தாய்ப்பால் சுரக்காமல் இருப்பது மிக மிக அரிதாகும் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் வரை காத்திருக்கலாம். முதல் 10 நாட்கள் வரை கூட ஒரு சிலருக்கு பால் சுரக்க தாமதமாகலாம். அளவு குறைவாக இருக்கும். ஆனால் படிப்படியாக அதிகரித்து இரண்டு மாதங்கள் ஆகும் போது குழந்தைக்கு தேவையான அளவு பால் அல்லது அதைவிட அதிகமான பால் சுரக்கும்.

கூடுதலான மன அழுத்தம் அல்லது கடினமான பிரசவம். பிரசவத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய உடல் சோர்வு அல்லது குழந்தை தாயின் அருகில் இல்லாமல் பச்சிளம் குழந்தை பிரிவு போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டிருப்பது, போன்றவற்றால் தாய்ப்பால் சுரப்பது ஒரு சிலருக்கு குறைவாக இருக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கும் குழந்தைக்கும் காற்றோட்டமான தனிமையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது இல்லாதபோதும் தாய்க்கு தாய்ப்பால் சுரப்பதிலும் கொடுப்பதிலும் சிரமங்கள் ஏற்படலாம்.

தாய்ப்பால் போதுமான அளவு உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

தாய்ப்பால் குடித்தவுடன் குழந்தை நன்றாக உறங்குவது, ஒரு நாளைக்கு 6-8 முறை சிறுநீர் கழிப்பது,

தாய்ப்பால் குடித்தவுடன் மகிழ்ச்சியுடன் விளையாடுவது, இவற்றிலிருந்து குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

எப்போது வரை தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் அல்லது கொடுக்கலாம்?

முதல் நான்கு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. சில குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை கூட தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்கு பிறகு மற்ற உணவுகளை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தலாம்.

குறைந்தபட்சம் 9 மாதங்களில் இருந்து ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. உலக சுகாதார நிறுவனம் (WHO)பரிந்துரைப்பது இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதாகும்.

 

ஜெயஸ்ரீ சர்மா

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

பிரசவமான உடனே தாய்ப்பால் கொடுப்பதால் கர்ப்பப்பை நன்றாக சுருங்கும். இரத்தப்போக்கின் அளவு குறையும். முக்கியமாக தாயின் எடை குறையும். அதிக எடை ஏறாது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தால். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதும் எளிதாக இருக்கும்.

குழந்தை நம்மால் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை தாய்க்கு உண்டாகும். அத்துடன் செலவும் வேலையும் குறைவு. மார்பக புற்றுநோயிலிருந்து காப்பாற்றக்கூடிய முக்கிய காரணியாக தாய்ப்பால் கொடுப்பது விளங்குகிறது.

சிசுவுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?

தாய்ப்பால் கொடுக்கும் பொழுது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு இறுகிய பந்தம்

உருவாகிறது. குழந்தைக்கு மிகுந்த பாதுகாப்பு உணர்வும் பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி மிக சிறப்பாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குழந்தையின் உடல் எடையும் சரியான அளவு இருக்கிறது.

குறைந்தபட்சம் ஒரு வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வளர்ந்த பிறகும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை.

தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைக்கு வேறு உணவுகள் எப்போது தேவைப்படும்? தண்ணீர் கொடுக்க வேண்டுமா?

ஒரு குழந்தைக்கு 4-6 மாதங்கள் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அந்த நேரத்தில் தண்ணீர் கூட குழந்தைக்கு தேவையில்லை. ஆனால் புட்டி பால, மற்ற உணவுகளை துவங்கும் பொழுது குழந்தைக்கு இடையிடையே வெதுவெதுப்பான நீரை கொடுப்பது நல்லது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்கா விட்டால் என்ன செய்யலாம்?

தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் பச்சிளங்குழந்தை ஐந்து நாட்கள் வரை மலம் கழிக்காவிட்டாலும், ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், ஒரு நாளைக்கு பத்து முறை வரை மலம் கழிக்கலாம். அதுவும் நார்மல்.

தாயின் அழகு கெட்டுவிடுமா?

தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று தவறான ஒரு எண்ணம் உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது உண்டாகக் கூடிய மகிழ்ச்சிக்கு விலையேதும் இல்லை. குறிப்பாக மார்பக புற்றுநோயிலிருந்து ஒரு தாயை காக்கிறது. தாய்ப்பால் நிறுத்திய பிறகு சரியான உடற்பயிற்சி செய்தால் அழகில் எந்த குறைபாடும் ஏற்படாது.

உலகின் சில ஐரோப்பிய நாடுகளில் தாய்ப்பால் கொடுக்கும் தாயின் சதவீதம் 10% விட குறைவாக இருக்கிறது. அதாவது 100 -ல் 6 தாய் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதில் விருப்பமுடன் இருக்கிறார்கள்.

இங்கிலாந்து அயர்லாந்து கிரீஸ் நார்வே போன்ற பல ஐரோப்பிய நாடுகளும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் தாயின் சதவீதம் 60% ஆகும். ஆனால் பெரும்பாலான பணியிடங்களில் தாய்க்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடிய வசதிகள் இல்லை. அதை அரசு மேம்படுத்த வேண்டும்.

சிசுவின் முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பது வருங்கால தலைமுறையின் ஆரோக்கியத்திற்கும் உடல் உறுதிக்கும் அஸ்திவாரமாகும்.

அதுபோலவே இன்று ஆரோக்கியமாக இருக்கும் நாம் அனைவரும் நன்றியுடன் இருக்க வேண்டியது தன் ரத்தத்தை பாலாக்கி பரிந்தூட்டிய நம் அன்னைக்கு!

தாய் சேய் நலம் காப்போம்!

வாட்ஸ்அப்: 8925764148

Tags:    

Similar News