சிறப்புக் கட்டுரைகள்

வாழ்க்கையினை அரக்கனாக பார்க்காதீர்கள்!

Published On 2025-09-08 12:36 IST   |   Update On 2025-09-08 12:36:00 IST
  • செய்வன திருந்த செய்வதோடு, சிறப்பாகவும் செய்ய வேண்டும்.
  • உணவில் பாம்பின் விஷம் கலந்து அந்த ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.

காய்கறி என்றாலே பலருக்கும் அவ்வளவு பிடித்தமானதாக இருப்பது இல்லை. வெங்காயம், உருளை, தக்காளி, பூண்டு, இஞ்சி போன்றவை எப்படியோ சமையலில் இடம் பிடித்து விடுகின்றன. ஆனால் மற்ற காய்கறிகளில் எத்தனை சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், ஆன்டிஆக்ஸிடென்ட், நார்சத்து என கொட்டிக் கிடக்கின்றன.

அவையெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றன என்பது யாருக்கும் தெரிவதில்லை. கடும் நோய்களை தாக்கும் அபாயத்தினை வெகுவாக குறைக்கின்றன. ஜீரண சக்தி சீராகின்றது. எடை கூடுதல் தவிர்க்கப்படுகின்றது.

பொட்டாசியம், வைட்டமின் கே போன்றவை உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு, இருதய பாதுகாப்பு இவற்றைத் தருகின்றன. வைட்டமின் ஏ, பி. சத்துக்கள் ஆரோக்கியமான கண், மூளை இவற்றிற்கு உதவுகின்றன. உங்கள் தட்டில் பாதி பகுதி தட்டு நிரம்ப காய்கறிகள் இருக்க வேண்டும். சருமம் இளமையாய் இருக்கின்றது. புற்று நோய், சர்க்கரை நோய், இருதய நோய் இவைகளுக்கு எதிர்ப்பாக அமைந்து காய்கறிகளே உடலை பாதுகாக்கின்றது.

இப்படி எண்ணற்ற அத்தியாவசிய பயன்கள் உள்ளன.

* பசலை கீரை- குறைந்த கலோரி சத்து கொண்ட இந்த கீரை உடலுக்கு நல்லது.

* புற்று நோயில் இருந்து காப்பது, நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகின்றது.

* ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது.

* இருதய நோய்களில் இருந்து காக்கின்றது. பார்வை சீராக இருக்க உதவுகின்றது.

* எலும்பு ஆரோக்கியம் கூட்டுகின்றது. மக்னீசியம் சத்து நிறைந்தது.

* வைட்டமின் கே, ஏ. போலேட், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், வைட்டமின் பி6 என இதில் கொட்டி கிடக்கின்றது.

* உயர் ரத்த அழுத்தம் குறைக்கின்றது. வயது கூடும் பொழுது ஏற்படும் மறதி பாதிப்பு குறைகின்றது.

* குடல் ஆரோக்கியம் கூடுகின்றது. கழிவுப் பொருட்கள் தேக்கமின்றி வெளியேறுகின்றன.

* இரும்பு சத்து நிறைந்தது

கமலி ஸ்ரீபால்


 

* ஒரு கப் பசலை கீரை அன்றாடம் இருந்தாலே போதும். இத்தனை நன்மைகளும் கிடைக்கும். பிள்ளைகளுக்கு கொஞ்சம் பன்னீர், கொஞ்சம் உருளை, கொஞ்சம் கூட்டு என எளிதாய் சேர்க்கலாமே.

முட்டை கோஸ்- காபேஜ் எனப்படும் இந்த முட்டை கோசினை அதிகம் ஓட்டல்களில் கூட்டு, பொரியல் என பயன்படுத்துவார்கள். வீட்டில் இதற்கு சற்று மவுசு குறைவுதான். இதனை அதிக நீரில் வேக வைத்து நீரை கொட்டி சமைக்கும் போது சத்துக்களையும் இழந்து விடுகின்றோம். முட்டை கோஸ், காலிபிளவர், புரோகலி இவற்றினை ஒரு பிரிவின் கீழே கொண்டு வரலாம். இதில் பெரியது, சிறியது, நிற மாற்றம் கொண்டது என முட்டை கோஸ் பிரிவு படலாம். ஆனால் குணங்கள் அநேகமாக ஒரு மாதிரியாகதான் இருக்கும்.

* காபேஜில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது இதில் உள்ள வைட்டமின் கே1, கே2 இவைதான். ரத்தம் உறைதலுக்கு மிகத் தேவையான வைட்டமின் ஆகும்.

* வைட்டமின் 'சி' சத்து நிறைந்தது.

* இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நாட்பட்ட உடல் வீக்கங்களையும் குறைக்கின்றது.

* ஜீரணத்தை எளிதாக்குகின்றது. * இருதய பாதிப்பு அபாயத்தை குறைக்கின்றது.

* உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. * கெட்ட கொழுப்பு குறையும். * நார் சத்து கொண்டது. * சமைப்பது எளிது... விலையும் குறைவுதான். * சூப், கூட்டு, பொரியல், சட்னி, காபேஜ் பக்கோடா (எப்போதாவது) என உணவில் எளிதாய் சேர்க்கலாமே.

மஞ்ச பூசணி- தோட்டங்களில் காய்த்து கொட்டி கிடக்கும். இதற்கும் மக்களிடையே மவுசு குறைவுதான். ஆனால் இவையெல்லாம் நமக்கு இறைவன் கொடுத்த வரம். * நோய் எதிர்ப்பு சக்தி கூட்டவல்லது. * இதில் உள்ள அதிக வைட்டமின் 'சி' சத்து வெள்ளை ரத்த அணு உருவாக்கத்தில் பெரிதும் உதவுகிறது.

* இதனால் காயங்கள் எளிதில் குணமாகின்றன.

* வைட்டமின் ஏ, இரும்பு, ஸ்போலேட் சத்து நிறைந்தது.

* இதில் உள்ள வைட்டமின் ஏ, வியூடின், சான்தின் இவை கண்பார்வையை காப்பதில் பெரும் பங்கு கொள்கின்றன. குறிப்பாக முதுமைகால கண் பாதிப்புகளை காக்கின்றன.

* குறைந்த கலோரி சத்து கொண்டது என்பதால் எடை குறைப்புக்கும் உதவுகிறது.

* இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட் புற்று நோயினை எதிர்க்கும் வல்லமை கொண்டது.

இப்படியெல்லாம் வளம் கொண்ட இதனை உண்பது அவசியம் அல்லவா?

இதெல்லாம் கூட வாழ்வில் அவசியம்தான்.

* உங்களை மதிக்காத, அக்கறை கொடுக்காத ஒருவரின் பின்னால் நீங்கள் ஏன் தொங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் காட்டும் அலட்சியம், மரியாதையின்மையால் நீங்கள் ஏன் நொந்து துவண்டு, மனச்சோர்வில் செல்ல வேண்டும். ஏன் சோகமாக இருக்க வேண்டும். இவர்களை மனதில் இருந்து கண்டிப்பாக அகற்றி விடுங்கள். மறந்து விடுங்கள்.

* எதற்காகவும் யாரையும் கெஞ்சாதீர்கள். இறைவனிடம் கெஞ்சுங்கள். (உங்களுக்கு இறை நம்பிக்கை இருந்தால்) பிரபஞ்சத்திடம் கேளுங்கள். மற்றபடி மனிதர்கள் அடுத்தவனுக்கு வாழ்வில் சற்று இறக்கம் வந்தால்கூட ஏறி மிதித்து மகிழ்பவர்கள்தான்.

* தேவையான அளவு அடுத்தவரிடம் பேசுங்கள். நம் வீட்டு பால் செலவு, மளிகை செலவு, உறவினர் சண்டை இதெல்லாம் அடுத்தவருக்கு சொல்ல நீங்கள் என்ன சினிமா படம் ஓசியில் வெளியிடுகின்றீர்களா என்ன?

* மரியாதை இல்லாத இடத்தினை உடனே அமைதியாய் எதிர்த்து விட வேண்டும்.

* மதியாதார் தலை வாசல் மிதியாதே' என்பது தெரியுமே.

* முயற்சி, உழைப்பு, பணம் இவற்றினை உங்கள் மீது முதலீடு செய்து மகிழ்ச்சி பெறுங்கள்.

* பிறரைப் பற்றி, ஊர் வம்பினை சிறிது கூட ஆதரிக்க வேண்டாம்.

* வாயில் இருந்து ஒரு வார்த்தை வருவதற்குள் நன்கு யோசித்து சொல்ல வேண்டும். இதில் தான் உங்களைப் பற்றிய மதிப்பும், மரியாதையும் பதிவாகின்றது.

* தேவையின்றி பிறரைத் தூக்கி தலையில் வைத்து ஆட வேண்டாம். அவரவர் பண்பின் தகுதிக்கேற்ப அவர்களை மதித்தால் போதும்.

* செய்வன திருந்த செய்வதோடு, சிறப்பாகவும் செய்ய வேண்டும்.

* நமக்கு மகிழ்ச்சி வேண்டும். துன்ப கடலில் நீந்த வேண்டாம். அனைவரும். அன்னை தெரசா ஆக முடியாது.

* உங்கள் குழந்தைகளுடன் நன்கு நேரம் செலவழியுங்கள்.

பழைய நிகழ்வுகளை தோண்டி எடுத்து வருந்த வேண்டாமே.

* வாழ்க்கையினை கொடூர அரக்கனாக பார்க்கக் கூடாது. நாம் நன்கு வாழ வேண்டும்.

* அடிக்கடி வெளியில் செல்லுங்கள். இயற்கையோடு இருங்கள். சூரிய உதயம், கடல், மலை, பூங்கா என அத்தனை இடங்கள் உள்ளன. 'இவை அனைத்தும் வாழ்வினை நன்கு வாழ்வதற்காகவே' ஊர்வம்பு, புரளி, பிறரைப் பற்றி பேசக்கூடாது என்பதனை வலியுறுத்தும் ஒரு கதையினைப் பார்ப்போமா.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு கொஞ்சம் நல்ல மனசு. இரக்கமான மனசு. அன்றாடம் கண் தெரியாதோர் ஆயிரம் பேருக்கு உணவு அளித்து வந்தார். ஒருநாள் அந்த உணவில் பாம்பின் விஷம் கலந்து ஆயிரம் பேரும் இறந்து விடுகின்றனர். ராசாவின் மனசு பாடாய்பட்டது. புண்ணியம் சேரா விட்டாலும் பரவாயில்லை. இப்படி பாவத்தினை சேர்த்துக் கொண்டு விட்டோமே என்று வேதனைப் பட்டான். ஊர் ஊராய் சுற்றி அலைந்தான். ஒரு நாள் இரவில் ஒரு கிராமத்தினை வந்தடைந்தான். அவனை யாருக்கும் அடையாளம் தெரிய வில்லை. மிகுந்த சோர்வாய் இருந்த அவன் ஒரு நல்ல பக்திமான் இருக்கும் வீட்டில் ஓய்வெடுக்க விரும்பினான்.

அங்குள்ளவர்களை விசாரித்த பொழுது சற்று தள்ளி உள்ள குடிசையினை காட்டி 'இங்கு ஒரு சிறுவனும், சிறுமியும் உள்ளனர். அவர்கள் உடன்பிறந்தவர்கள். இந்த சிறு வயதிலேயே மிகுந்த பூஜை, பக்தி என்று இருப்பவர்கள். நீங்கள் அவர்கள் வீட்டு திண்ணையில் இன்று இரவு தங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர்.

அரசனும் அங்கு சென்றார். இரவும் சரி, விடியற்காலையும் சரி அந்த சிறுவனும், சிறுமியும் தியானம், பூஜை என்றிருந்தனர். வழக்கத்தினைக் காட்டிலும் அன்று அதிக நேரம் சிறுமி தியானத்தில் இருந்தாள். அப்பொழுது அவனது சகோதரன் 'அக்கா இன்று நீ மிக அதிக நேரம் தியானத்தில் இருந்தாய். ஏன்? வாசலில் ஒரு வழிப்போக்கர் உள்ளார்.

அவருக்கு நாம் ஏதாவது உணவு கொடுக்க வேண்டாமா? என்று கேட்டான். அந்த பெண்ணோ, ஒரு விநோதமான குழப்பம் எமதர்ம ராஜனுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு அரசன் தினமும் 1000 பேருக்கு உணவளித்து வந்துள்ளான். அந்த உணவில் பாம்பின் விஷம் கலந்து அந்த ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.

எமதர்மராஜனின் குழப்பமே இந்த பாவக் கணக்கினை யார் மீது எழுதுவது? அந்த பாம்பினை தூக்கிப் பறந்த பறவையின் மீதா, இறுக்கத்தால் விஷம் கக்கிய அந்த பாம்பின் மீதா அல்லது அரசன் மீதா என்ற விவாதம் நடக்கிறது. இதனை கேட்டுக் கொண்டிருந்தால் என் தியான நேரம் கூடி விட்டது என்றாள். இந்த விஷயம் தன்னைப் பற்றியதாக இருக்கவே அரசன் கூர்ந்து கவனித்தான்.

'என்ன முடிவு எடுத்தார்கள்?'- சிறுவன்

'இன்னமும் முடிவு எடுக்கவில்லை?'-சிறுமி

அரசன் அந்த சிறுவர்களிடம் நான் இன்றும், நாளையும் இந்த வாசல் திண்ணையில் தங்கிக் கொள்ளலாமா எனக் கேட்டான். அவர்களும் மகிழ்ச்சியுடன் 'சரி' என்றனர்.

என்ன முடிவு வருமோ என்ற கவலை அரசனுக்கு. ஊர் மக்கள் இவன் தங்குவதைப் பார்த்தனர். அவ்வளவுதான். ஊர் தான் என்ன வேண்டுமானாலும் பேசுமே. அந்த சிறுமி அழகாக இருப்பதால் இந்த வழிப்போக்கன் அங்கே தங்கி இருக்கிறான் என தவறாக பேசத் தொடங்கினர்.

மறுநாள் சிறுமி தியானம் முடித்து வந்தாள். பயத்துடன் காத்திருந்த அரசன் 'குழந்தாய் இன்று எமதர்ம ராஜா என்ன முடிவு கூறினார்' என்று கேட்டார். அச்சிறுமி சொன்னாள் அந்த பாவம் எங்கள் கிராமத்தில் திண்ணையில் அமர்ந்து பேசிய நபர்களுக்கு பங்கிடப்பட்டுள்ளது. எனவே அடுத்தவரை தவறாக பேசுவது, கதை கட்டி விடுவது இவையெல்லாம் மற்றவர்களின் பாவத்தையும் சேர்த்து புரளி பேசுபவர் தலையில் கட்டி விடும். கவனம் தேவை.

Tags:    

Similar News