சிறப்புக் கட்டுரைகள்
null

வேண்டாதவற்றிலிருந்து விலகியே இருப்போம்!

Published On 2025-11-09 17:38 IST   |   Update On 2025-11-09 17:45:00 IST
  • அவரவர் பணிகளில் சுதந்திரமாகவும், சுய விருப்பத்துடனும் ஈடுபடுவதற்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும்.
  • யானைகள் இல்லாத காட்டில் ஏன் யானை பிடிக்கக் குழி வெட்டப்பட்டது? என்பது தனிவழக்கு!.

நமக்குத் தொடர்பில்லாத செயல்களிலிருந்து விலகியே இருப்போம்!; அது நமக்கும் நல்லது! அடுத்தவர்களுக்கும் நல்லது! என்பதில் அக்கறையாய் இருக்கும் வாசகர்களே! வணக்கம்.

இந்த உலகம் பயன்கருதுகிற உலகம். எந்தச் செயலை யார் செய்வார்? என்பது இல்லாமல், எந்தச் செயலை யார் அகப்படுகிறார்களோ அவர்கள் தலையில் கட்டிவிடுவது! என்பதில் ஆர்வமாய் இருக்கும் உலகம். அதனால், கணக்கெடுத்துப் பார்த்தால் தமக்குத் தொடர்புடைய வேலைகளைப் பார்க்காமல், தமக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் அகப்பட்டுக்கொண்டு விழித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இப்படி வேண்டாத வேலைகளில் அகப்பட்டுக் கொள்வது என்பது பலருக்கு அவர்களின் விருப்பத்தின் காரணமாகவே அமைந்து விடுகிறது; சிலர் விரும்பாமலேயே பல காரியங்கள் அவர்கள்மீது திணிக்கப்படுகின்றன. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்னும் சில காரியங்கள் அவர்கள் மீது அவர்கள் அறியாமலேயே சுமத்தப்படவும் செய்கின்றன.

மனித வாழ்தலின் போக்கில், அலுவல் ரீதியாகவோ, அல்லது குடும்ப ரீதியாகவோ, அல்லது சமூக ரீதியாகவோ சில பணிகளை, சில கடமைகளை, சில பொதுக் காரியங்களை மனிதர்கள் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். நாம் செய்வது அலுவல் சம்பந்தமானதோ, அல்லது குடும்பக் கடமைகளோ, அல்லது சமுதாயப் பொதுக் காரியங்களோ இவை எதுவாயினும் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் செய்தால் அவை இன்பமானவையாகவே அமையும். ஆனால் அவற்றையெல்லாம் வெறும் கடமைக்காகவும், ஊதியத்திற்காகவும், வெற்றுப் பகட்டிற்காகவும் செய்யும் மனநிலை வாய்த்தால், செயல்கள் கவலைகளின் குவியல்களாய்ப் பெருகிப் போகும்.

அந்த நிலையில் பார்த்தால் மனிதர்கள், தமக்கான வேலைகளைத் தமக்கான கவலைகள் ஆகவும், தமக்குத் தொடர்பற்ற வேலைகளை, அவையும் தம்மை மேலும் கவலைப்படுத்த வந்த பெருங்கவலைகளாகவுமே பார்க்கத் தொடங்கி விட்டனர். இன்றுள்ள நிலைமையில் மனிதர்கள் அவரவர் வேலைகளில் மட்டுமே அக்கறை காட்டிச் செய்து வந்தாலே போதும்; அடுத்தவர் வேலைகளில் மூக்கை நுழைத்துக் குழப்புவது; அந்த வேலைகளை அவர்கள் செய்ய விடாமல் தடுப்பது; கொஞ்சம் அசந்தால் தமது வேலைகளையும் அவர்கள் தலையில் கட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்ற வேடிக்கை நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்பமாயினும் பணிபுரியும் அலுவல் இடமாயினும் பணிப் பகிர்மானம் என்பது அவசியமானது ஆகும். வீடு என்று எடுத்துக்கொண்டால், வீட்டுப் பராமரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு, கல்வி, சமையல், நிதி நிருவாகம், குடும்பச் சுகாதாரம் போன்ற பல்வேறு பிரிவுகளில் கணவன் மனைவிக்கு இடையே பணிப் பகிர்மானம் தெளிவானதாக இருக்க வேண்டும். ஒருவர் பணி எல்லைக்குள் மற்றவர் தலையீடும், பணிச் சுமத்தலும் திணித்தலும் அறவே கூடாது. அவரவர் பணிகளில் சுதந்திரமாகவும், சுய விருப்பத்துடனும் ஈடுபடுவதற்கு முழு உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த உரிமை அடுத்தவர் கொடுப்பதாக அல்லாமல் அவரவர் எடுத்துக் கொள்வதாக இருக்க வேண்டும்.

சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்த மனைவியிடம் ஆசையாக வந்து, 'என்ன சமைத்துக் கொண்டிருக்கிறாய்? ரவா கேசரியா?" என்று ஆர்வத்தோடு கேட்டார் கணவர். "ஆமாம்!" என்றார் மனைவி. அதோடு 'சரி' என்று, 'மனைவி சமையல்கட்டில் அவர் வேலையைப் பார்க்கட்டும்! நாம் நமது வேலையில் கவனம் செலுத்துவோம்!' என்று கணவர் சென்றிருக்க வேண்டும். ஆனால் கணவர் சமையல்கட்டை விட்டுச் செல்லவில்லை; மாறாக, "ரவையைப் பொன்னிறமாக வறு!", "நெய்யில் பொரி", "தண்ணீரை ஊற்று", "சீனியைப் போட்டுக் கிண்டு", "வலது புறமாகக் கிண்டு", இடதுபுறமாகக் கிண்டு!" என்றெல்லாம் மாறிமாறிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

போதாக்குறைக்குக் கரண்டியைக் கையில் வாங்கி அவரே கிண்டவும் செய்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மனைவி, " இங்கே சமையல் நான் செய்யட்டுமா? இல்லை நீங்கள் செய்கிறீர்களா?. என்வேலையை என்னைப் பார்க்க விடுங்கள்!" என்று பொரிந்து தள்ளி விட்டார். இப்போது கணவர் பேசினார், "சமையல் வேலைபார்ப்பது எப்படி உன்னுடைய வேலையோ? அதில் தலையிட்டால் எப்படி உனக்குக் கோபம் வருகிறதோ? அதேபோலக் கார் ஓட்டுவது என்னுடைய வேலை; அதில், அருகில் அமர்ந்து கொண்டு, வலது திருப்பு, இடது திருப்பு, பிரேக் போடு, லைட் டிம் பண்ணு, பிரைட் பண்ணு, ஆரன் அடி! என்று என்னுடைய வேலைக்குள் தேவையில்லாமல் நீ தலையிட்டாலும் எனக்குக் கோபம் வரும்!" என்றார். அவரவர் வேலைகளை அவரவர் செய்துவிடுவர் என்று நம்பிக்கை வைத்துவிட்டால், தேவையற்ற தலையீடுகள் இல்லாமல் போகும்.

அதேபோலப் பணிபுரியும் இடங்களிலும் அவரவர் பணிப்பண்பாடு அவரவர்களால் பேணப்பட வேண்டும். அடுத்தவர் வேலைகளில் தேவையற்று நுழைந்து குற்றம் கண்டுபிடிப்பது; கோள் மூட்டுவது, தான் செய்யாமலிருப்பது மட்டுமல்லாமல் அடுத்தவர்களையும் பணியில் ஈடுபடாமல் தடுப்பது போன்ற செயல்களினால் பணிகள் விருப்பங்களாக அல்லாமல் கவலைகளாக மாறிவிடுகின்றன. தனது வேலைகளில் துளியும் அக்கறை செலுத்தாமல், அடுத்தவர் மீது குற்றம் கண்டுபிடித்து இரண்டுபக்க வேலைகளிலும் தோல்வி ஏற்படும்படி சிலர் நடந்து கொள்வர். இவ்வாறு தாம் செய்யும் பணிகளை எல்லாம் துன்பங்களாக எண்ணத் தொடங்கினால் அவை முடிவில் கவலைகளாகவே உருமாறிப்போகும். கவலைகள் எப்போதும் நல்ல பலன்களை விளைவிப்பதில்லை.' கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு! காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு! 'என்கிற திரைக்கவி வார்த்தைகள், ஆற்ற வேண்டிய காரியங்களின் கவலைகளை நீக்கி விட்டுத் துணிந்து செயலாற்றச் சொல்கின்றன.

சுந்தர ஆவுடையப்பன்

 

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்"

என்கிற வள்ளுவ வாசகம், எல்லாப் பொருள்களின் மீதும் பற்றறுக்கும் அவசியத்தைத் துறவிகளுக்கு வலியுறுத்திக் கூறுவது ஆகும். ஆயினும் இந்தக் குறளின் வாயிலாக மற்ற ஆசாமிகளும் பெற்றுக்கொள்ள வேறொரு நற்செய்தியும் உண்டு. தமக்குச் சொந்தமான பொருள்களின் மீதும் செயல்களின்மீதும் அக்கறை காட்டுவதும் ஆசையோடு செயல்படுவதும் உலகியல் கண்ணோட்டத்தில் சரியானதுதான் என்றாலும், தமக்குச் சொந்தமில்லாத, தமக்குச் சம்பந்தமில்லாத வேலைகளில் தலையிடுவது தேவையற்ற துன்பங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று எச்சரிக்கவும் செய்கிறது இந்தத் திருக்குறள்.

உலகின் ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்டுள்ள பணிகளில் மட்டுமே அக்கறை செலுத்துவது போதுமானது. ஒரு நகரப்பேருந்து போய்க்கொண்டிருக்கிறது என்றால், அதில் ஓட்டுநரின் பணி, போக்குவரத்து விதிகளின்படி வண்டியை ஓட்டுவது, நிறுத்தங்களில் நிறுத்திப், பயணிகள் பாதுகாப்பாக ஏற இறங்க உதவுவது, நேர மேலாண்மையில் அக்கறை காட்டுவது ஆகியவை மட்டுமே!; மாறாக ஏறிய பயணிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் தான் பயணச் சீட்டு தருவேன்! என்று அடம்பிடிக்கக் கூடாது: அது நடத்துநரின் வேலை.

பேருந்தில் ஏறுகிற பயணிகளில் ஒருவர், " இந்த ஓட்டுநர் வண்டியோட்டும் வாகு எனக்குப் பிடிக்கவில்லை!; எனக்கும் வண்டியோட்டத் தெரியும் ஆகையால் நான் தான் வண்டியோட்டுவேன்! என்று ஸ்டீயரிங் பக்கம் போய்விடக்கூடாது. பேருந்துப் பயணத்திலேயே இவ்வளவு பொறுப்புகளும் பணிகளும் அவரவர்க்கென்று இருக்கும்போது அடுத்தவர் பணிகளில் எதற்காக கவனம் செலுத்திக், கவலைகளை விலையின்றிப் பெற்றுக் கொள்ளவேண்டும்?.

ஒரு சந்தையில் ஒரு குதிரை வியாபாரி, மூன்று குதிரைகளை விலைக்கு வாங்கித், தனது ஊரை நோக்கி அவற்றை ஓட்டிக்கொண்டு வந்தான். ஒருகாட்டு வழியே விரைவாக மூன்று குதிரைகளும் ஓடி வரும்போது, சருகுகளால் மூடிக்கிடந்த ஒருபள்ளத்திற்குள் விழுந்து காலொடிந்து இறந்து விட்டன. பள்ளத்தை ஆராய்ந்து பார்த்த குதிரை வியாபாரி அப்பள்ளம் யானைகளை உயிரோடு பிடிப்பதற்காக வெட்டப்பட்ட பள்ளம் என்பதும், பள்ளம் இருப்பதை யானைகள் அறியாமலிருப்பதற்காகச் சருகுகள்போட்டு மூடப்பட்டுள்ளதையும் தெரிந்து கொண்டான்.

அந்த நாட்டை ஆளும் அரசனின் நெருங்கிய உறவினன் ஒருவனே அப்பள்ளத்தை வெட்டியவன் என்பதையும் கூடுதல் தகவலாக அறிந்துகொண்டான். அந்த வனத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சாது ஒருவர் அப்போது அப்பக்கம் வந்தார்; அவரிடம் எல்லா விஷயங்களையும் கூறித், தன்னுடன் வந்து அரசனிடம் நியாயம் கேட்க உதவுமாறும் வேண்டிக் கொண்டான். சாதுவும் குதிரை வியாபாரியும் அரசனிடம் நீதி கேட்க அரண்மனைக்குச் சென்றார்கள்.

அரசனிடம் எல்ல விவரங்களையும் கூறிய சாது, " அரசே! யானைக்குக் குழி வெட்டி, இந்தக் குதிரைகள் அதில் விழுந்து சாவதற்கு முழுமுதற் காரணமாக இருக்கும் தங்கள் உறவினனை, பாரபட்சம் பாராமல் தண்டித்து, உரிய நஷ்ட ஈட்டைக் குதிரை வியாபரிக்கு வழங்கிடுமாறு உத்தரவிடுங்கள்!" என்றார். நீள யோசித்த அரசன் இவ்வாறு தீர்ப்புக் கூறினான், "யானைக்கு வெட்டிய குழியில் யானைகள் விழுந்து இறந்திருந்தால் அதற்கு, உரியவனிடம் நஷ்ட ஈடு பெற்றுத் தரலாம்; ஏனென்றால் அந்தக் குழி யானைகளை உயிரோடு பிடிப்பதற்காக மட்டுமே வெட்டப்பட்ட குழி ஆகும்.

மற்றொன்று, யானைகளுக்காக வெட்டப்பட்ட குழியில் குதிரைகள் விழுந்தாலும் விழுந்து இறந்தாலும் அது நோக்கத்திற்குப் பொருந்தாத செயலாகவே கருதப்படுகிறது. மொத்தத்தில் வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்!" என்றார். சாது மேலும் பேசினார், "அரசே! இந்த வழக்குத் தொடர்பான கூடுதலான ஒரு செய்தி, அந்தக் காட்டில் யானைகளே கிடையாது! என்பதாகும்". " யானைகள் இல்லாத காட்டில் ஏன் யானை பிடிக்கக் குழி வெட்டப்பட்டது? என்பது தனிவழக்கு!. அதைத் தனியாகத்தான் விசாரிக்க வேண்டும். அதில் குதிரைகள் விழுந்து இறந்ததுதான் சம்பந்தமில்லதது என்று இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன். மேலும் நீர் காட்டில் தவம் செய்யும் துறவி; உமக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் நீர் சம்பந்தப்படுவது எதற்காக? என்று எச்சரிக்கும் தொனியில் அரசன் சாதுவைப் பார்த்து எதிர்க்கேள்வி கேட்டார். தொடர்பில்லாத விஷயங்களின் தொடர் சங்கிலியாய் வழக்கு நீண்டுகொண்டே போனது.

யானைகளே இல்லாத காட்டில் யானையைப் பிடிப்பதற்காக ஏன் குழி வெட்டப்பட்டது? யானைகள் விழும் பள்ளத்தில் ஏன் குதிரைகள் விழுந்தன? விழுந்த குதிரைகள் பிழைக்காமல் ஏன் இறந்து போயின? அரசன் குழிவெட்டிய உறவினனுக்காக வழக்கைத் திசை திருப்புகிறானா? எந்தப்பற்றும் இல்லாத துறவி எதற்காகக் குதிரை வியாபாரிக்காகப் பரிந்து பேச வேண்டும்?.

நமக்கு வேண்டாத வேலைகளிலிருந்து சற்றே அல்ல முழுமையும் விலகி இருப்பது இருநூறு சதவீதம் பாதுகாப்பானது.

தொடர்புக்கு - 9443190098

Tags:    

Similar News