- அறிவு நல்லது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனிதன் பணத்தை மட்டும் நல்லது என்று ஏற்றுக்கொள்ளத் தயங்குவது ஏன்?.
- ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி; இருவருக்கும் ஏழாம் பொருத்தம்; ஒருவர் வடக்கே திரும்பி நின்றால், மற்றவர் தெற்கே திரும்பி நிற்பார்.
எல்லாருக்கும் உதவுவதில் எப்போதும் அக்கறை காட்டும் இனிய வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
உதவுவதற்குப் பணமும் நல்ல குணமும் தேவை. ஆனால், 'பணம் இருப்பவர்களிடம் அறிவு இருப்பதில்லை! அறிவு இருப்பவர்களிடம் பணம் இருப்பதில்லை!' என்று இருவேறுபட்டதாக உலகம் எப்போதும் இருக்கிறது என்னும் நம்பிக்கை திருவள்ளுவர் காலம்தொட்டே இருக்கிறது.
''இருவே றுலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு"
வள்ளுவர் குறிப்பிட்டுச் சொல்லும் இந்தச் செல்வந்தர் குறித்த சிந்தனை, பொத்தம் பொதுவானதே யொழிய, ஒட்டுமொத்தச் செல்வந்தர் இனத்தையும் அறிவில்லாதவர்கள் என்று இழிவுபடுத்திக் காட்டுவது அல்ல. அப்படி இருந்திருந்தால், வரலாற்றில் இவ்வளவு நீளமான வள்ளல்கள் பட்டியலில் இத்தனை பணக்காரர்கள் இருந்திருக்க மாட்டார்கள் இன்றைக்குப் பணம் ஈட்டுவது எப்படி? என்பதைக் கற்பிக்கத், தனிப் படிப்புத் துறைகளும் பயிற்சிகளும் உருவாகிவிட்டன. பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்லர். அப்படி அவர்களை முட்டாள்கள் என்று வள்ளுவர் உறுதியாக நம்பியிருந்தால்,
"செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்"
என்று பணம் சம்பாதிக்கச் சொல்லும் கட்டளைக் குறளை அவர் உருவாக்கியிருக்க மாட்டார். திருவள்ளுவர், 'பொருள் செயல்வகை' எனவொரு தனி அதிகாரத்தையே உருவாக்கிச், செல்வத்தின் இன்றியமையாமையையும் அதை ஈட்ட வேண்டியதன் அவசியத்தையும் பத்துக் குறள்களில் வலியுறுத்தியுள்ளார். 'பொருள் என்னும் பொய்யா விளக்கம்' என்று குறிப்பிட்டு, இருளில் தவித்துக்கிடக்கும் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒளியேற்றி வைக்கும் அணையாத விளக்குப் போன்றது பணம் என்கிறார்.
"அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்"
என்னும் குறளில் திருக்குறளின் பாடுபொருளாகிய முப்பொருள் உண்மையில், அறம், இன்பம் ஆகிய வாழ்வின் இரண்டு உறுதிப் பொருள்களையும், பொருள் என்னும் உறுதிப் பொருள்கொண்டு நிச்சயம் அடைந்து விடலாம் என்கிறார்; ஒரே ஒரு நிபந்தனை; அந்தப் பொருள் என்னும் செல்வம் நல்வழியில் ஈட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
அறிவு நல்லது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனிதன் பணத்தை மட்டும் நல்லது என்று ஏற்றுக்கொள்ளத் தயங்குவது ஏன்?. அறிவின் துணை கொண்டு தீய செயல்களைத் தவறின்றிச் செய்து, மற்றவர்க்கும் உலகிற்கும் துயரமும் கெடுதல்களும் விளைவிக்க முடியும் என்றால் அந்த அறிவும் தீயது தானே!. அறிவோ அல்லது செல்வமோ இரண்டுமே நல்லதுதான். அவற்றை நாம் பயன்படுத்தும் நோக்கங்களின் அடிப்படையில் அவை தம்மீது நல்லது அல்லது கெட்டது என முகப்பூச்சுக்களைப் பூசிக்கொள்கின்றன.
எப்படி அறிவு பெறுகிற முயற்சியில் படிக்காதவர், படித்தவர் என்று எவரும் ஈடுபடலாமோ, அதைப்போலப் பணம் சம்பாதிக்கிற முயற்சியிலும் அறிவாளி, முட்டாள் என்று எவரும் ஈடுபடலாம். சேர்க்கின்ற அறிவையோ அல்லது ஈட்டுகின்ற செல்வத்தையோ எப்படி, எந்தெந்தச் செயல்களுக்காகச் சமூகத்தில் பயன்படுத்தப் போகிறோம்? அல்லது செலவு செய்யப் போகிறோம் என்பதைப் பொறுத்தே நாம் புத்தி சாலியா? இல்லையா? என்பது தீர்மானிக்கப் படுகிறது.
சுந்தர ஆவுடையப்பன்
நல்ல குணநலனும், அறிவுவளமும் உடையவனிடத்தில் பணம் இருப்பது, நோய் நீக்கப் பயன்படுகிற மருந்து மரம் ஊருக்கு நடுவுள் எல்லாருக்கும் பயன்படும் வகையில் வளர்ந்திருப்பது போலாகும் என்கிறார் திருவள்ளுவர்; மேலும் ஊர் உண்ணப் பயன்படுகிற ஊருணிக் குளம், நன்னீரால் நிறைந்திருப்பது போலவும் அது ஆகும் என்கிறார். ஊருக்கு நடுவில் கைக்கெட்டும் தூரத்தில், பசியமர்த்தப் பழம் தருகிற பழமரம் காய்த்துச் செழித்திருப்பது போலவும் இது அமையும் என்று வள்ளுவர் பாராட்டுகிறார்.
அறிவுடையார் வசமுள்ள செல்வம் அடுத்தவர்க்கு நிச்சயம் பயன்படுவதாக அமைய வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. சிலரிடம் அளவிட முடியாத செல்வம் குவிந்து கிடக்கும். அவர்களிடம் அவ்வளவு செல்வம் எப்படிச் சேர்ந்தது என்பதையே அறிந்து கொள்ள முடியாத பேதையாகவும் அவர்கள் இருப்பர்; அது மட்டுமல்ல; 'செல்வத்துப் பயனே ஈதல்!' என்கிற பொன்னான வாக்கைப் புரிந்து கொள்ளாதவர்களாகவும், புரிந்து கொண்டாலும் செயல்படுத்த மனம் வராத கருமிகளாகவும் அவர்கள் இருப்பர்.
இவர்களிடம் இருக்கும் செல்வம் இவர்களுக்கோ, இவர்களைச் சார்ந்தோருக்கோ எந்த வகையிலும் எந்தக் காலத்திலும் பயன்படப் போவதில்லை என்பது வள்ளுவர் விடுகின்ற நடப்பியல் சாபம்.
"ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை"
ஈட்டிய செல்வத்தை எல்லோருக்கும் உதவும்படியாகக் கையாளத் தெரியாத அறிவிலிகளிடத்தில் பணம் சேர்ந்திருந்தால், அது அவர்களுக்கோ அல்லது அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கோ பசியாறக் கூடப் பயன்படாது; மாறாக அந்தச் செல்வத்தை அந்த அறிவிலிக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத யார்யாரோ அனுபவித்திருப்பார்களாம்.
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி; இருவருக்கும் ஏழாம் பொருத்தம்; ஒருவர் வடக்கே திரும்பி நின்றால், மற்றவர் தெற்கே திரும்பி நிற்பார். எந்தச் செயல் செய்தாலும் ஏட்டிக்குப் போட்டி, ஏடாகூடம். இன்றைக்குப் பெரும்பாலான குடும்பங்கள் இப்படித்தானே இருக்கின்றன! இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று சிலர் கேட்கலாம். இப்படி இருப்பதும் சில குடும்பங்களில் நன்மையை விளைவிக்கவும் செய்கின்றது.
அந்தக் குடும்பத்தில் மனைவி மகா கருமி; தானாகவும் அடுத்தவர்க்கு எதுவும் தரமாட்டார்; தன் குடும்பத்தைச் சேர்ந்தோரையும் அடுத்தவர்க்கு ஒருபொருளையும் தருவதற்கு விடவும் மாட்டார். ஆனால், அவருடைய கணவரோ தயாள சிந்தனை உடையவர். உதவி என்று வந்து முகம் தெரியாதவர் கேட்டாலும் அடுத்தவர்க்குத் தெரியாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல். அவருடைய உதவும் படலம் மனைவிக்குத் தெரியாமல் நடந்து கொண்டிருந்தது.
ஒருநாள் மனைவி, தன் கணவரைப் பார்த்து, "என்கூடத் துணைக்கு வாருங்கள்! என் அம்மா வீடு வரை போய் வருவோம்" என்று அழைத்தார். 'எவ்வாறு செல்வது? ஆட்டோ, கார் ஏற்பாடு செய்யவா? என்று கேட்டால், இதோ பக்கத்தில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற வீட்டிற்கு எதற்கு ஆட்டோ, கார்? அதற்கு வேறு வாடகைக் காசு கொடுக்க வேண்டும்! என்று வழக்கம்போல மறுத்துவிடுவார்' என்பது கணவருக்குத் தெரியும். சரி கிளம்பு என்று மனைவியோடு நடந்து செல்லத் தொடங்கி விட்டார்.
மனைவி வாசலுக்கு வந்ததும் காலில் போட வேண்டிய செருப்புகளைக் கழற்றிக், கையில் வைத்திருந்த பைக்குள் போட்டுக்கொண்டார்; 'சாலைதான் சுத்தமாக இருக்கிறதே! செருப்பை வீணாகப் போட்டு, அதை ஏன் தேய விட வேண்டும்?. தேய்மானக் கூலியைச் சேமிக்கலாம்' என்கிற சிக்கனம், இல்லை இல்லை கருமித்தனம் அவரிடம்!.
கணவர் ஒன்றும் பேசாமல் மனைவியுடன் நடந்து கொண்டிருந்தார்; அவர் காலில் செருப்பு இருந்தது. நண்பகல் 11 மணி வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்தது; அதன் எதிரொலியாய்த் தார்ச்சாலையும் வெப்பத்தில் கொதிக்க ஆரம்பித்தது. வெற்றுக் கால்களோடு நடந்து கொண்டிருந்த மனைவியால் சூடு தாங்க முடியவில்லை.
"என்ன சாலை அமைத்திருக்கிறார்கள்?. நடந்து போகிறவர்கள் வெயிலுக்கு ஒதுங்க, சாலையோரங்களில் ஒரு மரமும் இல்லை; மக்கள் ஒதுங்கிக் காத்திருக்க எந்த நிழல் இடங்களும் இல்லை!" என்று திட்டத் தொடங்கி விட்டார். மனைவியின் பரிதாப நிலையைப் பார்த்த கணவர், "நீதான் அளவுக்கு அதிகமாகக் குண்டாக இருக்கிறாயே! அப்படியே நின்று உன் உடம்பின் நிழலிலேயே கால்களின் சூடு போகத் தேய்த்து ஆற்றிக் கொள்ளலாமே!" என்று கூறினார்.
"என்னங்க புரியாமப் பேசுறீங்க?. நம்ம நிழல் எந்தக் காலத்தில நாம ஒதுங்குவதற்கு உதவியிருக்கு?; நம் நிழல் எப்போதும் நமக்கு உதவவே உதவாது!" என்று மனைவி கூறினார். உடனே கணவர் பேசினார், "அருமையாகச் சொன்னாய்!, இதைத்தான் ரொம்பக் காலத்திற்கு முன்பிருந்தே உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நான் காத்திருந்தேன்!.
நம்முடைய நிழல்கூட நமக்கு உதவப் போவதில்லை! என்றால், நாம் இதுவரை சம்பாதித்துக், கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துள்ள காசுபணம், வீடுவாசல், நில புலம், நகை நட்டு இவைகள் மட்டும் நமக்கு எப்படி வந்து உதவி செய்துவிடப் போகின்றன; அவற்றை எந்த நல்ல காரியத்திற்கும் பயன்படுத்தாமல், தேவைப்படுகிறவர்களுக்குக் கொடுத்தும் உதவாமல், கஞ்சத் தனமாய்ச் சேர்த்து வைத்துச், சேர்த்து வைத்து என்னத்தை அனுபவிக்கப் போகிறோம்!".
செலவழிக்கப்படாத பணம், பூதம் காத்து வைத்துள்ள புதையல் போன்றது; யாருக்கும் கிடைக்காமல் புதைந்து விடப் போவது. யாருக்கும் உதவாத பணம், நாயிடம் அகப்பட்ட தேங்காய் போன்றது; தமக்கும் பயன்படாது; அடுத்தவர்க்கும் உதவிடாது வீணாகிப் போவது.
வாழப் பிறக்கிற உயிர்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை வசதியாக அமைத்துக் கொள்வதற்கு உதவியாக இந்த உலகமும், உலகின் இயற்கைப்படைப்புகளும் படைக்கப் பட்டன. கடவுளின் படைப்பான இந்த
இயற்கைச் சாதனங்களுக்கு அப்பால், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட கருவியே பணம் ஆகும்.
பண்டமாற்று முறை உள்ளவரை பணம் கண்டுபிடிக்கப்படவில்லை; பணம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் பொருள்களுக்கு விலைகள் நிர்ணயிக்கப்பட்டன; பணம், செலவழிக்கப்படாமல் சேமித்து வைக்கப்பட்டது; பணமுள்ளவன் பணக்காரன் ஆனான்; அவனால் எதனையும் விலைகொடுத்து வாங்கிச் சொத்துகள் குவித்து வைக்கமுடியும் என்ற நிலை வந்ததனால் அதிகார பலமும் மிக்கவனாகக் கருதப்பட்டான்.
நம்முடைய செல்வம் நம்மை மட்டுமல்லாமல், நம்முடைய எதிர்காலச் சந்ததியின் பாதுகாப்பிற்கும் உதவும் என்பது ஒருவகையில் உண்மை என்பதால், அதனைச் சம்பாதிப்பதை விடப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வதிலேயே மனிதன் அக்கறைகாட்டத் தொடங்கினான்; அதனால் அவனிடத்தில் கருமித் தனமும் அடுத்தவர்க்கு உதவாத சுயநலமும் பெருகிவிட்டது.
'செலவாவதுதான் செல்வம்' என்கிற செல்வத்தின் ரகசியம் புரிந்து கொண்டால் அதனை வீணாக இரும்புப் பெட்டிக்குள் சிறைவைத்திட மாட்டோம். விதைக்கப்படாத விதை விளைச்சலாவதில்லை; ஒன்றை விதைத்தால் அது பலவாகப் பெருகும் என்பதே விதைப்பின் தத்துவம்; இதுவே தருமத்தின் தத்துவமும்கூட. அதற்காகப் பயன்படாத நிலத்தில் யாரும் பயிர் வளர்ப்பதில்லை;
நமக்குக் கிடைக்கிற செல்வம் நாம் ஈட்டிய வரம்!: அவ்வரத்தை விதையாக்கி நமது சக மனிதர்க்கும், நாம் வாழும் சமூகத்திற்கும் மகிழ்ச்சி விளைச்சலைப் பெருகிடச் செய்வதே உண்மையான வாழ்வியல். உதவுவோம்; உதவ உதவ உதவிகள் பெருகிடும்.
தொடர்புக்கு 9443190098