2025 REWIND: பயணிகளின் பாராட்டைப் பெற்ற தமிழக அரசின் 'சென்னை ஒன்' செயலி
- மக்களின் பயணத்தை 'சென்னை ஒன்' செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவமைத்து கொடுத்து விடுகிறது.
- 'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள சில்வர் மற்றும் கோல்ட் வகை மாதாந்திர பயண அட்டைகளை பெற முடியும்.
சென்னையில் உள்ள மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் பொது போக்குவரத்தை தான் அன்றாடம் பயன்படுத்துகின்றனர். அதன்படி தினமும் அரசு மாநகர பஸ்களில் 35 லட்சம் பேரும், மின்சார ரெயில்களில் 12 லட்சம் பேரும், மெட்ரோ ரெயிலில் 3 லட்சம் பேரும் பயணிக்கின்றனர்.
மக்களின், இந்த பயணத்தை எளிதாக்க அரசு பல்வேறு வழிகளில் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. உதாரணமாக அரசின் சிங்கார சென்னை அட்டை மூலம் மாநகர பஸ் மற்றும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம். அதேபோல மின்சார ரெயில் பயணத்தை சீசன் அட்டை, யுடிஎஸ் மற்றும் ரெயில் ஒன் செயலிகள் மூலம் டிக்கெட எடுத்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனியாக டிக்கெட் வேண்டும்.
ஆனால் இந்த நிலையை மாற்றி, அனைத்து பொது போக்குவரத்துக்கும் ஒரே செயலியில் டிக்கெட் பெறும் வசதியை தமிழக அரசின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பான கும்டா தொடங்கி உள்ளது. அதற்காக வடிவமைக்கப்பட்ட `சென்னை ஒன்' (chennai one) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கி வைத்தார்.
இந்த செயலி, பொது போக்குவரத்துக்கு வெறும் டிக்கெட் எடுப்பதற்காக மட்டுமல்லாமல் மக்களின் பயணத்தை எளிதாக வகுத்து கொடுத்து இருக்கிறது. இந்த பயணத்தில் ஆட்டோ, கார் தேவை என்றாலும் அதற்கும் அதில் புக் செய்து விடலாம்.
உதாரணமாக நீங்கள் நந்தனத்தில் இருந்து காசிமேடு மீன் மார்க்கெட் செல்ல வேண்டும் என்று வைத்து கொள்வோம். `சென்னை ஒன்' செயலில், நீங்கள் நந்தனத்தில் இருந்து மெட்ரோ மூலம் எழும்பூர் வரையும், அங்கிருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை மின்சார ரெயிலிலும், அங்கிருந்து ராயபுரம் வரை மாநகர போக்குவரத்து பஸ்சிலும், பின் அங்கிருந்து ஆட்டோ அல்லது கார் மூலம் காசிமேடு மீன் மார்க்கெட் செல்வதற்கும் மொத்தமாக பதிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் அதில் ஆட்டோ மற்றும் கார் கட்டணத்தை மட்டும் டிரைவர்களிடம் செலுத்த வேண்டும். மற்ற மெட்ரோ, ரெயில், பஸ் ஆகியவற்றுக்கு பணம் செலுத்தி கியூ ஆர்கோடு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதில் சிறப்பு என்னவென்றால் மெட்ரோ, ரெயில், பஸ் எப்போது எந்த நேரத்தில் வரும், நீங்கள் எதில் செல்ல வேண்டும் என்பதனை தெரிந்து கொள்வதுடன் நீங்கள் பஸ் நிலையத்தில் இறங்கியவுடன் உங்களுக்கான ஆட்டோ, கார் தயாராக இருக்கும்.
அதாவது, மக்களின் பயணத்தை இந்த செயலி மிக எளிமையாக, சிக்கனமாக வடிவமைத்து கொடுத்து விடுகிறது. அதேபோல ஒவ்வொரு இடங்களிலும் நேரடியாக சென்று டிக்கெட் எடுக்க தேவையில்லை. அதே போல, தனித்தனி செயலிக்கு சென்று டிக்கெட் பதிவு செய்யவேண்டியதும் இல்லை.
இந்த செயலியில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளிலும் பயன்படுத்த முடியும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம்.
அதே போல் டிக்கெட்டிற்கு பணம் செலுத்த வசதியாக கும்டா யு.பி.ஐ. வசதியும் இருக்கிறது. அதனால் மற்ற யு.பி.ஐ. செயலிகள் தேவையில்லை. `சென்னை ஒன்' செயலியில், பல மேம்பட்ட அம்சங்கள் இருந்தாலும் இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டி உள்ளது. நீங்கள் மெட்ரோ, ரெயில் மற்றும் பஸ்சையும் இணைந்து டிக்கெட் எடுத்துவிட்டால், அதில் ஒன்றை நீங்கள் ரத்து செய்ய முடியாது. பதிவு (புக்கிங்) செய்து விட்டால் ரத்து செய்ய முடியாது.
மெட்ரோ ரெயில் சி.எம்.ஆர்.எல். செயலில் மை பாஸ் என்ற வசதி உள்ளது. அதில் நாம் பணம் செலுத்திவிட்டால், நாம் மெட்ரோவில் செல்லும் பயணங்களுக்கு மட்டும் பணம் செலுத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்த `சென்னை ஒன்' செயலியிலும் செல்லும் பயணத்துக்கு பணம் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இத்திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே 1 லட்சம் பேர் `சென்னை ஒன்' செயலியை பதிவிறக்கம் செய்தனர்.
'சென்னை ஒன்' செயலி மூலம் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள சில்வர் மற்றும் கோல்ட் வகை மாதாந்திர பயண அட்டைகளை பெற முடியும். பயண தேவைகளுக்கு ஏற்ப அட்டையை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
செயலி வழியாக மாதாந்திர அட்டைகள் வாங்கும் பயணிகளுக்கு அட்டை ஒன்றுக்கு ரூ.50 சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை உடனடி தள்ளுபடியாகவோ அல்லது கேஷ்பேக் முறையிலோ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் 'சென்னை ஒன்' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மொபைல் எண்ணை பயன்படுத்தி, ஓடிபியை பதிவிட்டு உள்நுழைந்து வேண்டும்.
மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் சென்னை புறநகர் ரெயில்சேவைகளுக்கு தனித்தனியாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வசதி முகப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், புறப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடத்தை பதிவிட்டு பயண வழித்தடத்தை பார்க்க முடியும். உதாரணத்திற்கு, தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் செல்வதற்கான போக்குவரத்து வழித்தடத்தை பதிவிட்டால் அனைத்துவிட சேவைகளும் காண்பிக்கப்படும்.
இதே வழித்தடத்தில் புறநகர் ரெயில் சேவையை பயன்படுத்துவோர் அதற்கான பயணச்சீட்டை பெறலாம்.
பொது போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு செல்ல வாடகை கார் மற்றும் ஆட்டோக்களும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
பல செயலிகளைப் பயன்படுத்தும் சிரமத்தைத் தவிர்த்து, ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறுவதால் பயணிகள் இதனைப் பாராட்டுகின்றனர்.
சென்னை ஒன் செயலி, சென்னையின் பொதுப் போக்குவரத்தை எளிமையாகவும், விரைவாகவும், திறமையாகவும் பயன்படுத்த உதவும் ஒரு புரட்சிகரமான செயலியாகும். இது 'One City, One App, One Ticket' என்ற கொள்கையுடன் செயல்படுகிறது.