2025 REWIND: சமூக நோயான வரதட்சணை கொடுமை... பறிபோகும் அப்பாவி பெண்களின் உயிர்கள்
- இது தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் நடைபெறும் மோசமான செயல்.
- வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது.
வரதட்சணை கொடுமை!
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது, அல்லது காட்சிகள் மாறினாலும் காலங்கள் மாறாது என்ற வாக்கியத்திற்கு ஏற்ப வரதட்சணை கொடுமை என்பது பல நூற்றாண்டு காலமாக தொடரும் கதை.
ஆசை ஆசையாக வளர்க்கும் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் தருணத்தில் பிள்ளை வீட்டார் வாய்க்கு வந்தபடி கேட்டு பெறுவதே வரதட்சணை என்பார்கள். வசதிக்கு ஏற்ப நகை, பணம், வாகனம் என கொடுத்து அனுப்பினாலும் வாழ சென்ற வீட்டில் பெண்கள் நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் இல்லை என்பதே பெரும்பாலானோரின் பதில்.
கேட்ட வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் ராணி மாதிரி வாழவைப்பேன் என்று சொல்லி அழைத்துச் செல்லும் பெண்களை மோசமான வகையில் நடத்தும் செயல்களும் நடக்கத்தான் செய்கின்றன. இது தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் நடைபெறும் மோசமான செயல். இதனால் பாதிக்கப்படுவதே ஆயிரம் கனவுகளுடன் புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள், அவர்களின் பெற்றோர் என்பதே நிதர்சனமான உண்மை.
அப்படிப்பட்ட வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்தாண்டு பலரின் மனதில் பாதிக்கப்பட்டது ரிதன்யாவின் மரணம் தான். அது என்ன ரிதன்யாவின் மரணத்தை சொல்றோம் என நினைக்க வேண்டாம். நினைத்ததை பெற விரும்பும் பிள்ளை வீட்டார், திருமணம் ஆகி சில மாதங்கள் வரை பெண்ணை சந்தோஷமாக வைத்திருப்பார்கள். ஆனால் ரிதன்யாவோ திருமணம் ஆன 77 நாட்களில் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தான் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரிதன்யா எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
கோவிலுக்கு செல்வதாக திருமணத்தின் போது தனக்கு கொடுத்த காரை எடுத்துக்கொண்டு சென்ற ரிதன்யா பாதி வழியிலேயே காரிலேயே தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் திருமணமான 77 நாட்களுக்குள், வரதட்சணை கேட்டு கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் துன்புறுத்தியதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்அப் வாய்ஸ் மேசேஜ் மூலம் அனுப்பியுள்ளார். இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவ்வழக்கு தொடர்பாக கணவர், மாமனார் கைதான நிலையில், மாமியாரை போலீசார் கைது செய்வதற்கு தாமதம் செய்தனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மாமியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தற்போது மூவரும் நிபந்தனை ஜாமினில் வெளியே உள்ளனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், ரிதன்யாவின் தந்தை, அரசியல் தலைவர்களைச் சந்தித்து முறையிட்டார்.
எது, எப்படியோ வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. அடுத்து ரிதன்யா போல் மற்றொரு பெண் வரதட்சணை கொடுமையால் மரணிக்கும் முன்பு நீதிமன்றங்கள் இதற்கு சரியான கடிவாளம் போட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.