2025 - ஒரு பார்வை

2025 REWIND: பாலியலும் அரசியலும்.. 2976 ஆபாச வீடியோக்கள் - பிரஜ்வலின் வக்கிர விளையாட்டு

Published On 2025-12-11 18:21 IST   |   Update On 2025-12-11 18:21:00 IST
  • மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
  • பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

பிரஜ்வல் ரேவண்ணா யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது பெயர். அரசியல் பின்புலத்தை வைத்து, பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய முன்னாள் மக்களவை எம்பி.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது. 

இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

ஆனால், கடந்த வருடம் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

இதன் பிறகு, ஜெர்மனிக்கு தப்பிச் சென்ற அவர், தாத்தா தேவகவுடா அறிவுரையை ஏற்று மே 31 தேதி நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பை அறிவித்தது.

அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது பிரஜ்வால் கண்ணீர் விட்டார். அவர் அழுது கொண்டே நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததாகத் தெரிகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரஜ்வாலுக்கான தண்டனை தீர்ப்பு வழங்கிய மறுநாளே அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(n)-ன் கீழ் (பாலியல் வன்கொடுமை) குற்றத்திற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

மேலும் ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. மொத்த அபராதத் தொகையான ரூ.10 லட்சத்தில், ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

Similar News