2025 REWIND: சாதி வெறியர்களால் தொடரும் ஆணவக் கொலை... இதுக்கு இல்லையா ஒரு END
- பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.
- குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆணவக் கொலை!
சாதியின் பெயரால் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்று பலரால் வலியுறுத்தப்படுகிறது. அது எப்போ வலியுறுத்தப்படுகிறது என்று கேட்டால் ஒரு ஆணவக் கொலை நடைபெற்ற பின்னர்.. அதன்பின் தனிச்சட்டம் குறித்த எந்த வலியுறுத்தலும் இல்லை.
இது இன்றைக்கோ, நேற்றைக்கோ கிடையாது. பல ஆண்டுகளாக தொடரும் அவலம். ஆணவக் கொலையால் ஒரு உயிர் பறிக்கப்பட்ட பிறகே பலரும் இதுகுறித்து பேசுகிறார்கள்... ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களின் நிலை பரிதாபத்துக்குரியது.
தமிழ்நாட்டில் 2017 முதல் 2025 வரை சுமார் 65 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளதாக தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 7 ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆணவ கொலை என்றதும் தர்மபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என பல பேரை சொல்லும் இந்த பட்டியலில் தற்போது கவின் கொலை வழக்கும் நினைவு கூறப்படுகிறது. அது குறித்து பார்ப்போம்..
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி கவின் தனது உடல்நிலை சரியில்லாத தாத்தாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அந்த மருத்துவமனையில்தான் கவின் காதலித்த பெண் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு வந்த அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித், கவினிடம் பேசுவதாகக் கூறி அவரைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு, சுர்ஜித் அரிவாளால் கவினைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். கொலை நடந்த உடனேயே சுர்ஜித் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தக் கொலையில் அப்பெண்ணின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாக கவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அப்பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல் துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு மாநில காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் அவரது உறவினர் ஜெயபாலன் ஆகியோரும் இந்தக் கொலையில் உடந்தையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டனர். சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. தற்போதைய நிலை இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாரால் நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகளின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், ஆணவக் கொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
அந்த கோரிக்கை அடுத்த ஆண்டாவது நிறைவேறுமா? என்பது பல ஆயிரம் கேள்விகளை உண்டாக்கியுள்ளது. காலம் தான் பதில் சொல்லும்.