2025 REWIND: தொகுதி மறுசீரமைப்பு... தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானங்கள்
- 1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா.
- ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும்.
தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) என்பது மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதாகும்.
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளானது அந்த மாநிலத்தில் உள்ள மக்கள்தொகையின் அளவுக்கு ஏற்ப வரையறை செய்யப்படுகின்றன. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கடந்த கால ஆட்சியாளர்கள் வெறுமனே மக்கள்தொகையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் அரசியலமைப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு தொகுதி மறுசீரமைப்பை தடுத்து நிறுத்தினர்.
ஆனால், தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பை 2026-ம் ஆண்டு நிகழ்த்த உள்ளது.
1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 2026 வரை மாற்றக்கூடாது என்ற திருத்தத்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அரசியலமைப்பு சட்டப் பிரிவு 82-ல் சேர்த்தார். இதனால், மக்கள்தொகை அதிகரித்தாலும் புதிய தொகுதிகளை உருவாக்க இயலாது. அதன்பின், 2001-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். இன்று வரை இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தொகுதிகளின் செயல்பாடு இருந்துள்ளது. தற்போது 25 ஆண்டு காலம் நிறைவுபெறும் தருணத்தில் பா.ஜ.க. அரசு தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
1952-ம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு பிரசாரம் பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆனால் வட இந்தியாவில் இந்த பிரசாரம் எடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். போதுமான கல்வி மற்றும் பகுத்தறிவு இல்லாத சமூகமாக மக்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாகவே இருந்தது.
மக்களிடையே 'நாம் இருவர் - நமக்கு ஒருவர்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள்தொகை பெருக்க அளவை குறைத்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. இதனால் மனித வளக் குறியீடுகளிலும், தனிமனித பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்து விளங்குகிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் சராசரி கருவள விகிதம் 2.1% ஆக இருந்து தற்போது 1.4% என்கிற அளவில் கட்டுக்குள் இருக்கிறது. அதன்படி, இந்தியாவிலேயே மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எதிர்வரும் 2031-36-ஆம் கால கட்டங்களில் இது மேலும் குறையும் என்று இந்திய புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது. கருவள விகிதம் கட்டுப்படுத்தப்பட்டதால்தான் மக்கள்தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் பொருளாதார விகிதத்தில் தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு தொடக்கம் முதலே தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
தொகுதி மறுசீரமைப்பு என்பதை பற்றி பா.ஜ.க. பேசவே இல்லை என்றும், தி.மு.க. தலைவர் வேண்டுமென்றே இது குறித்த வீண் வாதத்தை கிளப்புகிறார் என்றும், மத்திய அரசின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பேசி வருகின்றனர்.
19-9-2023 அன்று பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். அரசியல் சாசனத்தின் 128-வது திருத்த மசோதா-2023 என பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வழிவகை செய்கிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பு முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என்று விளக்கம் அளித்தார்.
அடுத்தாக, 28.05.2023 அன்று திறக்கப்பட்ட புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் மக்களவையில் 848 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடப்பில் 543 மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ள நிலையில் 848 இருக்கைகளுடன் பாராளுமன்றத்தை அமைப்பதன் பின்னணி என்ன? இதற்கு வலுசேர்க்கும் விதமாக புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்டு தனி பெரும்பான்மையோடு நிலைபெற்ற ஆட்சியை தொடர வேண்டும் என்பதன் அடிப்படை தான் தொகுதி மறுசீரமைப்பின் முழு நோக்கம் ஆகும். இது எப்படி சாத்தியமெனில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் 31 என குறையும், அதே வேளையில் பா.ஜ.க. ஆளும் பீகார், உ.பி., குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை கிட்டதட்ட இரு மடங்காக உயரும்.
2026-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 543 என நிர்ணயிக்கப்பட்டால் தென்னிந்தியாவில் தற்போது உள்ள மாநிலங்களின் இடங்கள் 130 என்பதிலிருந்து 103 என குறையும். மக்களவையில் 23.74% உள்ள தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம், 18.97% ஆக குறையும். தமிழ்நாட்டிற்கான மக்களவை தொகுதிகள் 39ல் இருந்து 31 ஆக குறையும். ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் இடங்கள் 42ல் இருந்து 34 ஆகும். அதேசமயம், அதிக மக்கள்தொகை மற்றும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் பெரும் ஆதாயத்தைப் பெறுகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இப்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க நேரிடக்கூடும். எனவே மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளக் கூடாது என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது.
இதை வலியுறுத்தி கடந்த மார்ச் 5-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சில இயக்கங்கள் என 63 அமைப்புகளுக்கு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாமல் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன. இதில் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் கட்சி ஆகியவை பங்கேற்கவில்லை.
இதில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது, தமிழகத்தின் 7.18 சதவிகிதத்தை மாற்றக்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் 22-ந்தேதி பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கக் கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. 2021-ல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது.
1971-2011 இடைபட்ட காலத்தில் உத்தரபிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளாவில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் இன்றைய சூழலில் சராசரியாக 15 லட்சம் பேருக்கு ஒரு மக்களை உறுப்பினர் இருக்கிறார். இது உத்தரபிரதேசத்தில் 25 லட்சமாக இருக்கிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு நிச்சயம் தீர்வு காணப்படத்தான் வேண்டும். ஆனால், 1952, 1963, 1973-ல் நடைபெற்ற மறுசீரமைப்புபோல அது சுலபமாக இருக்காது என்பது நிச்சயம்.