புதுச்சேரி

புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் மழை

Published On 2025-06-23 11:33 IST   |   Update On 2025-06-23 11:33:00 IST
  • புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 2 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.
  • பலத்த சூறைகாற்றினால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் வெயில் கொளுத்தியது.

இதனால் சாலைகளில் அனல் காற்று வீசியது. வாகன ஓட்டிகள். பொது மக்கள் அவதிப்பட்டனர். புதுச்சேரியில் நேற்று 98 டிகிரி வெயில் பதிவானது.

இந்த நிலையில் மாலை 6 மணிக்குமேல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7.30 மணிக்கு சூறைக்காற்று வீசியது. சாலையில் புழுதி, குப்பைகள் பறந்ததால் வாகன ஓட்டிகள் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழையும் பெய்தது.

இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. அதன் பிறகும் மழை தூறிக் கொண்டே இருந்தது. சூறைக்காற்று வீசியதில் கடலூர் சாலை மரப்பாலம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் சரிந்து விழுந்தன. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சிக்கி லேசான காயமடைந்தனர்.

இதுபோல் எஸ்.வி.படேல் சாலையில் நிழலுக்காக போடப்பட்டிருந்த பசுமை பந்தல் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 2 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. அப்போது அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. பலத்த சூறைகாற்றினால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Tags:    

Similar News