புதுச்சேரி

போலீஸ் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர். தமிழில் பதிவு செய்ய டி.ஜி.பி. உத்தரவு

Published On 2025-06-24 09:25 IST   |   Update On 2025-06-24 09:25:00 IST
  • மாகியில் மலையாள மொழியிலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
  • அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த பிராந்தியங்களில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த மே மாதம் டெல்லி சென்றபோது உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது புதிதாக அமல்படுத்தப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைபடுத்துவதை கண்காணிக்கவும் அதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் அறிவுறுத்தினார்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பிராந்திய மொழிகளில் போலீஸ் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழிலும், மாகியில் மலையாள மொழியிலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இதனை ஒருசில போலீஸ் நிலையங்கள் தவிர பெரும்பாலான போலீஸ் நிலையங்கள் பின்பற்றாமல் இருந்து வந்தன.

இந்தநிலையில் புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. ஷாலினி சிங், புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் எஃப்.ஐ.ஆர். தமிழில் பதிவு செய்ய வேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் தமிழிலும், மாகியில் மலையாளத்திலும், ஏனாமில் தெலுங்கிலும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். இதனால் பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன், வெளிப்படைத்தன்மையும் இருக்கும்.

எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் அந்தந்த பிராந்தியங்களில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News