புதுச்சேரி

டாக்டரிடம் ரூ.48 லட்சம் பறித்த மோசடி கும்பல்- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Published On 2025-03-29 12:09 IST   |   Update On 2025-03-29 12:09:00 IST
  • டாக்டர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
  • மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.

புதுச்சேரி:

புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மகந்த். தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.

இந்தநிலையில் அவரை மர்ம நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.

இதை உண்மை என்று நம்பிய அவர் ரூ.32 லட்சத்து 92 ஆயிரத்தை முதலீடு செய் தார். இதன்மூலம் கிடைத்த லாபம் மற்றும் முதலீடு செய்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார்.

ஆனால் அது முடியவில்லை. அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

மேலும் அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் டெல்லி போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்.

சிறுமிகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகவும், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.

அதை நம்பி அவரும் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். அதன்பின்னரே அவர் ஒட்டுமொத்தமாக ரூ.48 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News