புதுச்சேரி

காக்கிநாடா அருகே கரையை கடக்கும் புயல்- ஏனாமில் 3 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2025-10-26 11:47 IST   |   Update On 2025-10-26 11:47:00 IST
  • அனைத்து துறைகளும் அவரவர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  • அனைத்து அரசு பள்ளிகளும் நிவாரண மையங்களாக செயல்படும்.

புதுச்சேரி:

மோன்தா புயல் 28ந்தேதி இரவுக்குள் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநில ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே உள்ளது. இதனால் ஏனாமிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஏனாமில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டல நிர்வாகி அங்கீத் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புயல் தாக்கம் காரணமாக ஏனாமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளும் அவரவர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரண பணிகளை ஈடுபட 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை குழு ஏனாம் பகுதிக்கு இன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் நிவாரண மையங்கள் செயல்பட தயாராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளும் நிவாரண மையங்களாக செயல்படும். புயலை கருத்தில் கொண்டு ஏனாமில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 27-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா படகு இல்லம் மூடப்பட்டுள்ளது. மின்வெட்டு ஏற்படும்போது ஜெனரேட்டரை செயல்பாட்டில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் கரையோர பகுதிகளுக்கு புகுவதை தடுக்க மணல் மூட்டைகள் தயாராக வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை வெள்ள நீரை வெளியேற்ற பம்பு செட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான மருந்துகள் மற்றும் மளிகை பொருட்களை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் இருப்பவர் நிவாரண முகாமுக்கு வர தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News