புதுச்சேரி
null

போலீசாரின் ஆபரேஷன் 'திரிசூலம்' அதிரடி நடவடிக்கையில் புதுச்சேரியில் 100 ரவுடிகள் சிக்கினர்

Published On 2025-07-06 11:05 IST   |   Update On 2025-07-06 11:08:00 IST
  • ரவுடிகளின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • 78 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்தவும் ஆபரேஷன் திரிசூலம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை செய்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கி வைத்துள்ளனரா? என்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்வது மற்றும் அவர்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி போலீஸ் டி.ஜி.பி. ஷாலினிசிங் உத்தரவின் பேரில் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் தலைமையில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் அதிகாலை 4 மணி முதல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒரே நேரத்தில் 450-க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் 100 பேரை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் 78 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் அதிகாலை வேளையில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தியதால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News