காதலன் கைவிட்டதால் திடீரென வந்த நண்பனை மணந்த இளம்பெண் - பெற்றோர் எடுத்த வினோத முடிவு
- நீண்ட நேரம் காத்திருந்தும் அவருடைய காதலன் வரவில்லை.
- போன் மூலம் காதலனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார்.
காதலனுக்காக பெற்றோரை விட்டு ஓடி போய் ஏமாற்றமடைந்து வேறு ஒருவரை திருமணம் செய்யும் சம்பவங்கள் சினிமாவில் பார்த்திருக்கிறோம்.
ஆனால் அது போன்ற ஒரு ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம் ஒன்று மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள இந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா திவாரி. கல்லூரி படிப்பை முடித்த இவர் வீட்டில் பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். அவருடைய காதலன் எந்த சமயத்திலும் உன்னை கைவிடவே மாட்டேன் என அடிக்கடி வாக்குறுதி அளித்தார்.
இது ஒருபுறம் இருக்க காதல் விவகாரம் ஷ்ரத்தா திவாரி வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஷ்ரத்தா திவாரி வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது பற்றி அவருடைய காதலனிடம் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
சம்பவத்தன்று ஷ்ரத்தா திவாரி தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார். வீட்டில் இருந்த பெற்றோர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது நான் எனது காதலனை திருமணம் செய்து கொண்டு தான் வருவேன் என கூறினார்.
அவரிடம் பெற்றோர்கள் கெஞ்சி கதறி அழுது பார்த்தனர். ஆனால் தன்னுடைய காதலனை திருமணம் செய்வதில் ஷ்ரத்தா திவாரி உறுதியாக இருந்தார். பெற்றோரை உதறி விட்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் காதலனிடம்ஏற்கனவே கூறியபடி அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
நீண்ட நேரம் காத்திருந்தும் அவருடைய காதலன் வரவில்லை. போன் மூலம் காதலனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். அவர் அழைப்பை எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் காதலனிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதில் இப்போது எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
காதலனை நம்பி பெற்றோரை உதறி விட்டு வந்த ஷ்ரத்தா திவாரி கதறி அழுதார். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றனர். வீட்டிற்கும் செல்ல முடியாது காதலனும் கைவிட்டு விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் ஷ்ரத்தா திவாரி நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்.
அந்த நேரத்தில் ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். அந்த பெட்டியில் ஷ்ரத்தா திவாரி கல்லூரியில் படித்த போது நண்பராக இருந்த கரண் என்பவர் இருந்தார்.
இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது கண்கலங்கியபடி இருந்த ஷ்ரத்தா திவாரியிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என கரண் கேட்டார்.
திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்து விட்டேன். காதலன் கைவிட்டதால் அதுவும் நடக்கவில்லை. இனிமேல் என்னால் வாழ முடியாது என்றார்.
கரண் அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை. இறுதியாக கரண் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.
நம்பிக்கை துரோகம் செய்த காதலனை விட ஆபத்தில் உதவும் நண்பன் எவ்வளவோ மேல் என சிந்தித்த ஷ்ரத்தா திவாரி சம்மதம் தெரிவித்தார். இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் தம்பதியினர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் இளம்பெண் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவரது தந்தை நான் எனது மகளை 10 நாட்கள் கணவரிடம் இருந்து பிரித்து எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 10 நாட்களுக்கு பிறகும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விரும்பினால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதற்கு ஷ்ரத்தா திவாரி, கரண் இருவரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இளம்பெண் பெற்றோருடன் சென்றார்.
சினிமா போல் நடந்த இந்த சம்பவம் இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.