இந்தியா

Reuters உள்ளிட்ட 2,355 கணக்குகளை முடக்க உத்தரவிட்டதாக 'எக்ஸ்' குற்றச்சாட்டு - மத்திய அரசு மறுப்பு

Published On 2025-07-08 22:45 IST   |   Update On 2025-07-08 22:45:00 IST
  • தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A இன் கீழ் முடக்க இந்திய அரசு உத்தரவிட்டது
  • தேவையற்ற முறையில் தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி கணக்குகளின் முடக்கத்தை எக்ஸ் நீட்டித்தது.

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்ச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

ஜூலை 3 ஆம் தேதி, ராய்ட்டர்ஸ் உட்பட 2,355 கணக்குகளை ஒரு மணி நேரத்திற்குள், எந்த விளக்கமும் இல்லாமல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A இன் கீழ் முடக்க இந்திய அரசு உத்தரவிட்டது என்று எக்ஸ் சர்வதேச விவகாரங்கள் குழு குற்றம்சாட்டியது.

உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்றால் குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால், வேறு வழியின்றி உத்தரவைப் பின்பற்றியதாக எக்ஸ் தெரிவித்தது.

ஜூலை 3 ஆம் தேதி எந்த புதிய தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் போன்ற முக்கிய சர்வதேச செய்தி சேனல்களைத் தடுக்க அரசுக்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ராய்ட்டர்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் வேர்ல்ட் கணக்குகள் முடக்கப்பட்டவுடன், அவற்றை உடனடியாக இந்தியாவில் தடை நீக்க வேண்டும் என்று அரசு எக்ஸ்-க்கு கடிதம் எழுதியது.

ஜூலை 5 இரவு முதல் தொடர்ச்சியான பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, ஜூலை 6 இரவு 9 மணிக்கு மேல் தான் எக்ஸ், ராய்ட்டர்ஸ் மற்றும் பிற கணக்குகளைத் தடை நீக்கியது.

இதற்காக எக்ஸ், 21 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்டது என்றும் அரசு தெரிவித்துள்ளது. தேவையற்ற முறையில் தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி கணக்குகளின் முடக்கத்தை எக்ஸ் நீக்க தாமதித்ததாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

கணக்குகளை முடக்கும் உத்தரவுகள் தொடர்பாக எக்ஸ் நிறுவனம் இந்திய அரசை அடிக்கடி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News