மெட்ரோ ரெயிலில் பஜனை பாடிய பெண்கள்
- பஜனை பாடுவதை நிறுத்திய பெண்கள் போலீஸ் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர்.
- வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றது.
டெல்லி, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். சமீப காலமாக மெட்ரோ நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களுக்குள் பயணிகளுக்கிடையே மோதல், ரீல்ஸ் வீடியோ தயாரிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வகையில் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் டெல்லி மெட்ரோ ரெயிலுக்குள் பெண்கள் சிலர் பஜனை பாடிய காட்சிகள் உள்ளது. அதில், மெட்ரோ ரெயிலில் கூட்டம் நிறைந்த இடத்தில் பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து வந்த சில பெண்கள் டோலக், கர்த்தாள் போன்ற இசைக்கருவிகளை இசைத்து சத்தமாக பஜனை பாடினர். இதனை ரெயிலில் பயணிக்கும் சக பயணிகளும் கண்டு கொள்ளாதது போல் இருந்தனர். ஏராளமான பயணிகள் தங்களது செல்போனை பார்த்தவாறும், சிலர் பெண்களின் பஜனையை வீடியோ எடுத்தவாறும் இருந்தனர்.
அப்போது அந்த பெட்டிக்குள் நுழைந்த மத்தியதொழில் பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி ஒருவர் பஜனை பாடிய பெண்களை நிறுத்தி, ரெயிலுக்குள் சக பயணிகளுக்கு இடையூறாக நடந்து கொள்ளக்கூடாது என எச்சரித்தார். அதன் பிறகு பஜனை பாடுவதை நிறுத்திய பெண்கள் போலீஸ் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர்.
இதுகுறித்த வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றது. நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், கடவுள் மீதான பக்தி நல்லது. ஆனால் தேவையற்ற பக்தி நல்லதல்ல என பதிவிட்டார். சில பயனர்கள், அவர்கள் பொது இடங்களில் தகாத முறையில் நடந்து கொள்ளாமல் பஜனை பாட்டு தான் பாடி உள்ளனர் என ஆதரவாக பதிவிட்டனர்.