நாடு முழுவதும் 5 நாட்கள் கடும் வெப்ப அலை வீசுமா? - மத்திய அரசு விளக்கம்
- வெயிலில் சென்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டும்.
- கியாஸ் சிலிண்டர்களை வெயில் படும்படி வைக்கவேண்டாம்.
புதுடெல்லி:
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான கோடை மழை பெய்து வருகிறது. அதேசமயத்தில் பீகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.
இந்தநிலையில், நாடு முழுவதும் வருகிற 29-ந்தேதி முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை பகல் நேரங்களில் வெயில் 113 டிகிரி முதல் 131 டிகிரி வரை கொளுத்தும்.
எனவே அந்த நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதாகவும், இதனை குறிப்பிட்டு மத்திய அரசு பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
அந்த தகவலில், வெயிலில் சென்று நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டும். வீடுகளில் காற்றோட்டத்துக்காக கதவு, ஜன்னல்களை திறந்து வைக்கவேண்டும். அதிக வெப்பத்தால் செல்போன்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதால் அதன் பயன்பாட்டை குறைக்கவேண்டும். தயிர், மோர், பழச்சாறு உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களை அதிகம் பருகவேண்டும்.
கியாஸ் சிலிண்டர்களை வெயில் படும்படி வைக்கவேண்டாம். மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் எரிபொருள் முழுவதுமாக நிரப்பி வைக்கவேண்டாம் என்றும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 5 நாட்கள் கடும் வெப்ப அலை வீசும் என்பது தொடர்பாக பரவி வரும் இந்த தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், ''இதுபோன்ற தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. ஆதாரமற்ற செய்திகளை யாரும் நம்பவேண்டாம்'' என்று கூறப்பட்டுள்ளது.