ராஜ்யசபாவில் கர்ஜித்த ஜெகதீப் தன்கர் எங்கே?.. இதற்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது - ராகுல் காந்தி
- துணைத் ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?
- இப்போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அதையே செய்கிறார்கள்.
ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் டெல்லியில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "நாம் ஏன் ஒரு புதிய துணைத் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். நேற்று நான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, பழைய துணைத் ஜனாதிபதி எங்கே போனார் என்று கேட்டேன்?
துணைத் ஜனாதிபதி ராஜினாமா செய்த நாளில், வேணுகோபால் ஜி என்னை அழைத்து, துணைத் ஜனாதிபதி பணியை விட்டு போய்விட்டார் என்று கூறினார். இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.
சிலருக்குத் தெரியும், சிலருக்குத் தெரியாது. ஆனால் அவர் மறைந்திருப்பதாக ஒரு கதையும் இருக்கிறது.
இந்திய துணைத் ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?
ராஜ்யசபாவில் கர்ஜித்தவர் திடீரென்று முற்றிலும் அமைதியாகிவிட்டார்" என்று தெரிவித்தார்.
மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து பதிலளித்த ராகுல், "பீகாரில் நெருப்பு பற்றி எரிகிறது.
இந்த நெருப்பைப் பார்க்க அனைத்து தலைவர்களையும் நான் அழைக்கிறேன். அதைத் தடுக்க முடியாது. பீகாரில் நான்கு வயது குழந்தை 'வாக்கு திருடன், வாக்கு திருடன்' என்று கத்துகிறது.
அவர்கள் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களைத் திருடினர். இப்போது பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் அதையே செய்கிறார்கள்" என்று கூறினார்.