பஹல்காமில் 27-28 பேரை இழந்தோம், மேலும் அதிகமானோரை இழந்தோம்: சாதித்தது என்ன?- மெகபூபா முஃப்தி கேள்வி
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 27-28 பேர் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தான் தாக்குதலில் எல்லையில் வசித்து வரும் மக்களில் 15-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில பிடிபி கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கூறியதாவது:-
பஹல்காம் தாக்குதலில் நாம் 27-28 பேரை இழந்தோம். அதன்பின் அதிகமான மக்களை இழந்துள்ளோம். பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஏராளமான வீடுகள் தாக்குதலுக்கு உள்ளாகின. பூஞ்ச் நகரமும் சீர்குலைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் பிடிக்கப்படவில்லை. அப்படியென்றால் நாம் சாதித்தது என்ன?.
போர் தீர்வு அல்ல என இரு நாடுகளும் புரிந்து கொண்டுள்ளன என நான் நம்புகிறேன். போர் அழிவை கொண்டு வருகிறது. அது வெறும் மீடியாக்களின் டிஆர்பி-ஐ மற்றும் அதிகரிக்கிறது. எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள், குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் அழிவை பெறுகிறார்கள்.
இவ்வாறு மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. பின்னர் இரு நாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டது.