வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசின் ரூ.260 கோடி நிதியுதவி இன்னும் வந்து சேரவில்லை - பினராயி விஜயன்
- ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
- புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,262 கோடி கோரியிருந்தது.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கான மத்திய அரசின் நிதி உதவி குறித்துதகவல் தெரிவித்தார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.260.65 கோடி நிதி உதவி இதுவரை மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேசிய அவர், ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,262 கோடி கோரியிருந்தது.
பேரிடருக்கு பிந்தைய தேவைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் ரூ.2,221.10 கோடி நிதியுதவியைக் கோரி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசு ரூ.260.65 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த தொகையுமே இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி இதில் தலையிட வேண்டும் எனவும் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.