வக்பு வழக்கு: பரபரப்பு இருதரப்பு வாதங்கள் நிறைவு - இடைக்கால தடை குறித்த தீர்ப்பு ஒத்திவைப்பு
- அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று ஷரியா சட்டம் கூறுகிறது
- வக்பு 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் இடுகாடுகளை கூட ஒன்றிய அரசு தனது நிலம் என்று கூறி எடுத்துக்கொள்ளும்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், அரசியல் அமைப்பு சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் 70-க்கு மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் மத்திய அரசு வக்பு சட்டதிருத்தத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் அமர்வில் மூன்றாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் புதிய வக்பு சட்டத்துக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் ஆஜராகினர்.
பல பழங்குடி மக்களின் நிலங்கள் வக்பு பெயரில் அபகரிக்கப்பட்டுள்ளன என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.மேலும் ஒருவர் தனிநபர் சட்டத்தின் பயன்களை பெற வேண்டும் என்றால், அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று ஷரியா சட்டம் கூறுகிறது, அதையேதான் வக்பு சட்ட திருத்தமும் கூறுகிறது. என்று தெரிவித்தனர்.
இதன்பின் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் வாதிட்டனர்.
"வக்பு என்பது இஸ்லாமின் ஒரு அத்தியாவசிய மத நடைமுறையா? இல்லையா? என்பதை தீர்மானித்த பின்பே இடைக்கால உத்தரவை நீக்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.
வக்பு சொத்து தொடர்பாக ஒரு பிரச்னை எழும்போது முதலில் அந்த சொத்தின் பிரச்னைக்கு தீர்வு காணும் வரையில், அது வக்பு சொத்தாக கருதப்படாது என்று அறிவிக்கப்படும். அந்த காலகட்டத்தில் அந்த சொத்து என்பது அரசு சொத்தாக கருதப்படும் என புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் எவ்வளவு கால அவகாசத்துக்குள் அந்த சொத்துமீது முடிவெடுக்க வேண்டும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு கால நிர்ணயமும் கிடையாது. எந்த ஒரு நிலத்தையும் அரசு தன்னுடையது எனக்கூறி எடுத்துக்கொள்ளும். வக்பு 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் இடுகாடுகளை கூட ஒன்றிய அரசு தனது நிலம் என்று கூறி எடுத்துக்கொள்ள முடியும். இது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை மீறல்" என அவர்கள் வாதிட்டனர்.
இதன்பின் பேசிய நீதிபதிகள், " வக்பு சொத்து மீது விசாரணை தொடங்கியதிலிருந்து, அதுசார்ந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரையில் அந்த சொத்து வக்பு என்ற அந்தஸ்தை இழந்து விடும்தானே என்பதுதான் எங்களின் முக்கிய கேள்வி" என்று கூறினார்.
தொடர்ந்து வக்பு புதிய சட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கும் விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டது என்று அறிவித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.