VIDEO: நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளம்.. சிக்கிய ஆறு பெண்கள் - துணிச்சலாக மீட்ட கிராம மக்கள்
- மலையிலிருந்து நீர்வரத்து அதிகரித்ததால், நீர்வீழ்ச்சி ஆக்ரோஷமாக மாறியது.
- மேலும் மூன்று பெண்கள் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள லங்குரியா மலை நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த ஆறு பெண்களை உள்ளூர் கிராம மக்கள் துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை லங்குரியா நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர். அப்போது, ஆறு பெண்கள் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென மலையிலிருந்து நீர்வரத்து அதிகரித்ததால், நீர்வீழ்ச்சி ஆக்ரோஷமாக மாறியது. இதனால் மற்ற சுற்றுலாப் பயணிகள் பயத்தில் ஓடிவிட்டனர். ஆனால், இந்த ஆறு பெண்களும் வெள்ளத்தின் நடுவில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாகச் செயல்பட்ட உள்ளூர் கிராம மக்கள், முதலில் ஒரு பெண்ணை பாறையைக் கடந்து பாதுகாப்பாக மீட்டனர். அப்போது மேலும் மூன்று பெண்கள் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனாலும், கிராம மக்கள் அவர்களை மிகுந்த சிரமத்துடன் பள்ளத்தாக்கிலிருந்து மீட்டனர். மற்ற இரண்டு பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கையின்போது, ஒரு பெண் பாறையில் மோதி காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் லங்குரியா நீர்வீழ்ச்சியில் இவ்வளவு கடுமையான நீர் ஓட்டத்தை இதற்கு முன் பார்த்ததில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.