துணை ஜனாதிபதி தேர்தல்- முதல் நபராக வாக்களித்தார் பிரதமர் மோடி
- மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.
புதுடெல்லி:
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி உறுதியானது.
இதற்கிடையே இந்த தேர்தலில் எவ்வாறு வாக்கு அளிக்க வேண்டும்? என தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பிலும், 'இந்தியா' கூட்டணி சார்பிலும் தங்களது அணி எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 'இந்தியா' கூட்டணி இதனை ஒரு மாதிரி தேர்தலாகவே நடத்திப் பார்த்தது.
பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த வாக்களிப்பு ஒத்திகையில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களும், அந்தந்த கூட்டணி கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் நேற்று டெல்லி வந்தனர். அவர்கள் தேர்தல் பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் ஆகியோர் தனித்தனியாக கலந்து ஆலோசித்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க தயார் ஆனார்கள்.
இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம் கட்சி, இந்த தேர்தலில் பங்களிக்கப்போவது இல்லை என தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் எம்.பி.யான சஸ்மித் பத்ரா இதனை புவனேஸ்வரில் தெரிவித்தாலும், டெல்லியிலும் இதனை உறுதி செய்தார்.
இந்த கட்சிக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 7 பேர் இருக்கிறார்கள்.
இதைப்போல பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியும் தேர்தலை புறக்கணிக்கிறது. அந்த கட்சியின் செயல் தலைவரான கே.டி.ராமராவ் இதனை அறிவித்தார். இந்த கட்சிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 4 உறுப்பினர்கள் உள்ளனர்.
தேர்தலின் போக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை காட்டுகிறது என்றே சொல்லலாம். இருப்பினும் இரு அணிகளும் நேற்று வாக்களிப்பில் வெற்றிகரமாக பங்கேற்பது பற்றி பல்வேறு ஆலோசனைகளை நடத்தின.
இந்த நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.
வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.