சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு படுகொலை... நரோதா படுகொலை வழக்கின் தீர்ப்பு குறித்து சரத் பவார் அதிருப்தி
- விருது வழங்கும் விழாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அலட்சியமாக செயல்பட்டது என்றார்
- எதிர்க்கட்சிகளை ஒழிப்பதற்காக பாஜக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சரத் பவார் குற்றம் சாட்டினார்.
மும்பை:
2002ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு குஜராத் மாநிலம் முழுவதும் கடும் வன்முறை வெடித்தது. இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கலவரத்தின்போது அகமதாபாத்தின் நரோதா காமில் 11 இஸ்லாமியர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 67 பேரையும் குஜராத் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அதிருப்தி தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது என்றும், இது நேற்றைய தீர்ப்பின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 16ம் தேதி நடந்த விழாவில் வெப்ப அலையால் மக்கள் உயிரிழந்தது குறித்து பேசிய சரத் பவார், விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்ததில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகளை ஒழிப்பதற்காக பாஜக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சரத் பவார் குற்றம் சாட்டினார்.