இந்தியா

புலித்தோலுடன் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

குஜராத்தில் புலித்தோல் வைத்திருந்த வீரப்பன் கூட்டாளி கைது- தமிழக வனத்துறையிடம் ஒப்படைப்பு

Published On 2023-06-01 05:40 GMT   |   Update On 2023-06-01 05:40 GMT
  • கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 13.9 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
  • 2006-ம் ஆண்டு வரை சேலத்தில் முகாமிட்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அகமதாபாத்:

சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக 1992-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை செயல்பட்டவர் பிரகாஷ் ஜெயின்(வயது56). குஜராத் மாநிலம் போடக்தேவ் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரியான இவர் வன விலங்குகளை வேட்டையாடி அதன் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 13.9 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்பு ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெயின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் புலித்தோல் வைத்திருந்ததாக அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர் மீது வன விலங்குகள் (பாது காப்பு) சட்டம், 1972 இன் பிரிவுகள் 2, 39 (பி), 44, 49 (பி), 50 மற்றும் 51 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, அவர் தமிழ்நாட்டின் திருச்சி வனச்சரக பகுதியில் விலங்குகளை வேட்டையாடியதாக தெரிகிறது. அவரிடம் இருந்து ஒரு புலித்தோல், 2 யானை தந்தம், இரண்டு கொம்புகள் மற்றும் நரியின் வால்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவரை அகமதாபாத் போலீசார் தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஜெயினுடன் மேலும் 7 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இதனிடையே கைதான ஜெயின் மற்றும் 7 பேரையும் வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். கைதான ஜெயின், வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் 2006-ம் ஆண்டு வரை சேலத்தில் முகாமிட்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Tags:    

Similar News