இந்தியா

உ.பி. பள்ளிகளில் தமிழ் கற்றுத் தருகிறோம்.. யோகி ஆதித்யநாத் பேச்சு - ஆதாரம் கேட்கும் கார்த்தி சிதம்பரம்

Published On 2025-04-01 14:49 IST   |   Update On 2025-04-01 14:49:00 IST
  • தங்கள் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் என்ற விவரங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிடுமா?
  • எத்தனை மாணவர்கள் தமிழை ஒரு மொழி விருப்பமாகப் படித்துள்ளனர்?.

தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை இந்து திணிப்பு என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி வரையிலான கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது.

இந்நிலையில் மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்வதாக மு.க. ஸ்டாலினை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்து வருகிறார்.

செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் பேசிய யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஆனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தடுக்கிறார்கள்.

உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம், அதனால் உ.பி. சிறியதாகிவிட்டதா?. மாறாக உத்தர பிரதேசத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தங்கள் பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்த எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் என்ற விவரங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிடுமா?.

எத்தனை மாணவர்கள் தமிழை விருப்பம மொழிப் பாடமாக படித்துள்ளனர்?. தமிழ்நாட்டில் மாணவர்கள் கட்டாயமாக இந்தி கற்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தமிழ் குறித்த முன் அறிவு இல்லாமல் வருகிறார்கள். இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் முந்தைய விமர்சனத்துக்கு பதிலளித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை, இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News