இந்தியா

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- மீட்பு பணி தீவிரம்

Published On 2023-07-07 02:17 IST   |   Update On 2023-07-07 02:17:00 IST
  • நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
  • கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு நகரில் பெய்த கனமழை காரணமாக இருக்கலாம் என சந்தேகம்.

தெற்கு டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் இரண்டு தளங்கள் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ளனர்.

விபத்து தொடர்பாக, காவல் துறைக்கு நேற்று மாலை 4.25 மணியளவில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இரண்டு தொழிலாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறை மற்றும் டெல்லி தீயணைப்பு துறை இணைந்து நடத்திய மீட்பு நடவடிக்கையில் மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களும் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறுகையில், "கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. டி-இரும்புடன் கூரைகள் இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

இதற்கு காரணமானவர்கள் மீது டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு நகரில் பெய்த கனமழை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News