2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்டு- கேரள அரசு அதிரடி நடவடிக்கை
- வேளாண்மை துறை சிறப்பு செயலாளராக இருப்பவர் பிரசாந்த்.
- புகார்கள் தொடர்பாக விசாரிக்க தலைமை செயலாளருக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில அரசில் தொழில்துறை இயக்குனராக இருப்பவர் கோபால கிருஷ்ணன். வேளாண்மை துறை சிறப்பு செயலாளராக இருப்பவர் பிரசாந்த்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இவர்கள் மீது அரசுக்கு புகார்கள் வந்தன. மத சார்பின் அடிப்படையில் வாட்ஸ்-அப் குழுவை கோபாலகிருஷ்ணன் உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் இந்து அதிகாரிகள் என்ற வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தியதற்கு குழுவில் சேர்க்கப்பட்ட சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாந்த், கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெயதிலக்கிற்கு எதிராக சமூக ஊடகங்களில் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க தலைமை செயலாளருக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
அதன்படி விசாரணை நடத்திய தலைமை செயலாளர் சாரதா முரளீதரன், சேவை விதிகளுக்கு எதிராக 2 அதிகாரிகளும் செயல்பட்டதால், அவர்கள் மீது விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கோபால கிருஷ்ணன், பிரசாந்த் ஆகியோரை சஸ்பெண்டு செய்து முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்தார்.