இந்தியா

திருப்பதி கோவிலில் வரலாற்றில் முதல்முறையாக ஒரே மாதத்தில் ரூ.130 கோடி உண்டியல் வருமானம்

Published On 2022-06-11 09:47 IST   |   Update On 2022-06-11 09:47:00 IST
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
  • திருப்பதி கோவிலில் கடந்த மே மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடியை தாண்டியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் உண்டியல் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. கோவிலுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1500 கோடி வரை உண்டியல் வருவாய் கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது.

திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரு மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை வந்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

இந்த மே மாதத்தில் 22.62 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 1.86 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.72 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்தில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி வழிகின்றன. சாமி தரிசனத்திற்கு 25 மணி நேரம் ஆகிறது.

நேற்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 949 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 39, 837 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ‌.3.70 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் சரோஜா சூரியநாராயணன் தம்பதியினர் ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பில் 4 கிலோ 150 கிராம் எடையில் வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை ஏழுமலையான் கோவிலில் நேற்று காணிக்கையாக வழங்கினர்.

Tags:    

Similar News