தெலுங்கானாவில் இடி, மின்னல் தாக்கி கிரிக்கெட் விளையாடிய நண்பர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
- மின்னல் தாக்கியதில் பிரசாத், யஷ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- ரவிகிரண் படுகாயம் அடைந்து சுய நினைவை இழந்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், படலப் பள்ளியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 14). இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11 ), ரவிக்கிரண் ஆகியோர் நேற்று புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் அருகில் உள்ள மாம்பழத் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் பிரசாத், யஷ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரவிகிரண் படுகாயம் அடைந்து சுய நினைவை இழந்தார். அருகில் இருந்தவர்கள் ரவிக்கிரனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதேபோல் காமிரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (25). இவரது நண்பர் மகேஷ். இருவரும் நேற்று ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இடி தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.