காட்டு ராஜ்ஜியம் திரும்ப வேண்டுமா அல்லது வளர்ச்சி நிலவ வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல்- அமித் ஷா
- ராகுல் காந்தி ஊடுருவல்காரர்களை பீகாரிலேயே இருக்க விடுங்கள் என்கிறார்.
- எங்களுடைய அரசு அனைத்து ஊடுருவல்காரர்களையும் நாட்டில் இருந்து வெளியேற்றும்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ககாரியா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்ட பேரணியில் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ராகுல் பாபா (ராகுல் காந்தி) ஊடுருவல்காரர்களை பீகாரிலேயே இருக்க விடுங்கள் என்கிறார். நீங்கள் சொல்லுங்கள், ஊடுருவல்காரர்களை இங்கேயே இருக்க விட வேண்டுமா?. நீங்கள் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க எத்தனை பேரணியில் நடத்துகிறீர்கள் என்பது பிரச்சினை அல்ல. குஸ்பெட்டியா பச்சாயோ யாத்ரா (Ghuspetiya Bachao Yatra) மூலம் ஊடுருவல்காரர்களை அவரால் பாதுகாக்க முடியாது.
எங்களுடைய அரசு அனைத்து ஊடுருவல்காரர்களையும் நாட்டில் இருந்து வெளியேற்றும். அவர்கள் கண்டறியப்படுவார்கள். பின்னர் அவர்களுடைய நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
பீகாருக்கு காட்டு ராஜ்ஜியம் திரும்ப வேண்டுமா அல்லது மாநிலம் மீண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல்தான் இந்த தேர்தல். லாலு-ராப்ரி அரசு அமைந்தால், காட்டு ராஜ்ஜியம் மட்டுமே வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பீகாரின் வளர்ச்சி ஒட்டுமொத்த நாட்டின் உச்சத்தை எட்டும்.
மாநிலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சியை நிதிஷ் குமார் விரும்புகிறார். லாலு பிரசாத் அவரது மகனை முதலமைச்சராக்க விரும்புகிறார். சோனியா காநதி, அவருடைய மகனை பிரதமராக்க விரும்புகிறார். எனவே, பீகாரின் மகன்கள் மற்றும் மகள்களைப் பற்றி நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் ஆகியோரால் மட்டுமே அக்கறை கொள்ள முடியும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.