பாதிக்கப்பட்ட பெண் அவரே பிரச்சனையை வரவழைத்துக் கொண்டார்.. பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐகோர்ட் சர்ச்சை
- ஜாமீன் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் விசாரித்தார்.
- அதற்கு அவளும் பொறுப்பு என்றும் முடிவு செய்யலாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் "அவரே பிரச்சனையை வரவழைத்துக் கொண்டார்" என்றும், இந்த சம்பவத்திற்கு அவரும்தான் பொறுப்பு என்றும் கூறி குற்றவாளிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை பயின்று வந்த மாணவி கடந்த 2024 செப்டெம்பரில் தோழிகளுடன் டெல்லியில் உள்ள ஒரு பாருக்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனேவே தெரிந்த சில ஆண் நண்பர்களை அவர்கள் சந்தித்துள்ளனர்.
நள்ளிரவானதால், அதில் ஒருவர் தன்னை அவன் வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியதாகவும், ஆனால் வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், குர்கானில் உள்ள ஒரு உறவினரின் பிளாட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருந்தார்.
இதில் குற்றம்சாட்டப்பட்டவர் கடந்த டிசம்பர் 2024 இல் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது ஜாமீன் கேட்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது ஜாமீன் மனுவில், அந்தப் பெண் ஓய்வெடுக்க விரும்பியதால் தன்னுடன் விருப்பத்துடன் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் அவளை உறவினரின் குடியிருப்புக்கு அழைத்துச் செல்லவில்லை அல்லது பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், சம்மதத்துடன் உடலுறவு கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜாமீன் மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங், " பாதிக்கப்பட்ட பெண், முதுகலைப் பட்டதாரி மாணவி என்பதால், அவரது செயல்களின் ஒழுக்கத்தையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவராகவும் திறமையானவராகவும் இருந்தார் என்பதை காவல்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.
பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவரே பிரச்சனையை வரவழைத்துக் கொண்டார். அதற்கு அவரும் பொறுப்பு என்று முடிவு செய்யலாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது" என்று கூறி குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.