இந்தியா

ஆசிரியர்களின் அலட்சியத்தால் பறிபோன 7 மாணவர்களின் உயிர்.. அரசுப் பள்ளி விபத்து பற்றி வெளிவந்த உண்மை

Published On 2025-07-26 14:44 IST   |   Update On 2025-07-26 14:44:00 IST
  • பள்ளியின் சுவர்கள் மற்றும் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் பலமுறை புகார் அளித்தனர்.
  • "ஜூன் மாதத்திலேயே மாணவர்களை பாழடைந்த பள்ளி கட்டிடங்களில் உட்கார வைக்க வேண்டாம் என்று நாங்கள் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருந்தோம்.

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிம்ப்லோடில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை அரசுப் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏழு அப்பாவி மாணவர்கள் உயிரிழந்தனர். 11க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சம்பவத்திற்கு முன்பு மாணவர்கள் கூரையிலிருந்து கற்கள் விழுவதாக என்று ஆசிரியர்களை எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.

இதுகுறித்து விபத்தில் இருந்து தப்பிய எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் கண்ணீருடன் கூறுகையில், "மேலே இருந்து கற்கள் விழுவதாக ஆசிரியர்களிடம் சொன்னோம். ஆனால் அவர்கள் எங்களைத் திட்டி வகுப்பறையில் உட்காரச் சொன்னார்கள். அப்போது,  கூரை இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது" என்று கூறினார்.

இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் ஆசிரியர்கள் வெளியே காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது ஆசிரியர்களின் கடுமையான அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

பள்ளியின் சுவர்கள் மற்றும் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பதாக உள்ளூர்வாசிகள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு மேற்பரப்பு சிமென்ட் மற்றும் பிளாஸ்டரிங் மூலம் தாற்காலிகமாகச் சரிசெய்யப்பட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, ஜலவார் மாவட்ட ஆட்சியர் அஜய் சிங் ரத்தோட், அலட்சியத்திற்காக ஐந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்தார்.

"ஜூன் மாதத்திலேயே மாணவர்களை பாழடைந்த பள்ளி கட்டிடங்களில் உட்கார வைக்க வேண்டாம் என்று நாங்கள் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்திருந்தோம். இந்த சம்பவத்தில் தெளிவான அலட்சியம் உள்ளது. நாங்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளோம், அதன் அறிக்கையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ரத்தோட் கூறினார்.   

Tags:    

Similar News