இந்தியா

"இந்தியாவின் வங்கித் துறையை நெருக்கடியில் தள்ளிய பாஜக அரசு" - ராகுல் காந்தி பாயிண்ட்!

Published On 2025-03-29 21:58 IST   |   Update On 2025-03-29 21:58:00 IST
  • ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 782 பேர் சார்பாக குழு ஒன்று என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தது.
  • இதில் இரண்டு சம்பவங்களில் தற்கொலைகளும் நடந்துள்ளன.

பெருநிறுவனங்களுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி குறித்து மோடி அரசின் மீது ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் உடனான தனது சந்திப்பு வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், " பாஜக அரசாங்கம் அதன் பில்லியனர் நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

நண்பர்களுக்கு சலுகை, ஒழுங்குமுறை தவறிய நிர்வாகத்துடன் இணைந்து, இந்தியாவின் வங்கித் துறை நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்தச் சுமை இறுதியில் மன அழுத்தம் மற்றும் நெருக்கடிகளைத் தாங்கும் இளம் பணியாளர்கள் மீதே திணிக்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியர்கள் 782 பேர் சார்பாக குழு ஒன்று என்னை பாராளுமன்றத்தில் சந்தித்தது. பணியிட துன்புறுத்தல், கட்டாய பணியிட மாற்றம், என்ஏபி விதிகளை மீறியவர்களுக்கு நெறிமுறையற்று வழங்கப்பட்ட கடன்களை அம்பலப்படுத்தியதற்காக பழிவாங்கல் நடவடிக்கை, பணிநீக்கம் என பல பிரச்சனைகளை அவர்கள் தெரிவித்தனர். இதில் இரண்டு சம்பவங்களில் தற்கொலைகளும் நடந்துள்ளன.

இந்தப் பிரச்சினை ஐசிஐசிஐ வங்கியைத் தாண்டி நாடு முழுவதும் உள்ள பல வங்கி  ஊழியர்களை பாதிக்கிறது. பாஜக அரசின்  தவறான பொருளாதாரத் நிர்வாகம், மனித உயிரைப் பறிக்கிறது. இது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களை பாதிக்கும் ஒரு தீவிரமான கவலைக்குரிய விஷயம்.

இந்த தொழிலாள வர்க்கதினருக்கு நீதி கிடைக்க காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினையை முழு தீவிரத்துடன் கையாளும்" என்று தெரிவித்தார். மேலும் ஏப்ரல் 7 ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற உள்ள 'அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில்' கலந்து கொள்ள அனைவருக்கும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:    

Similar News