சொரப்பில் காரில் கஞ்சா கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை
- காரில் கஞ்சா கடத்தி செல்வதாக கலால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கலால்துறையினர் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பி சென்று விட்டனர். அதில் ஒருவர் பிடிபட்டார்.
சிவமொக்கா:
சிவமொக்கா மாவட்டம் சொரப் டவுன் பத்ராவதி சாலையில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி காரில் கஞ்சா கடத்தி செல்வதாக கலால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கலால்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து காரை டிரைவர் நிறுத்தினார். அப்போது காரில் வந்தவர்கள் தப்பியோடினர்.
அவர்களை கலால்துறையினர் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பி சென்று விட்டனர். அதில் ஒருவர் பிடிபட்டார். விசாரணையில், அவர் பத்ராவதி தாலுகா கல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 38) என்பதும், காரில் கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அதில் இருந்த 50 கிலோ 430 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள், காரையும் கலால்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். இதையடுத்து முருகனை கைது செய்து அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர் முருகன் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. கலால்துறையினர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி மஞ்சுநாயக் காரில் கஞ்சா கடத்தி சென்றது உறுதி செய்யப்பட்டதால் முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.