ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக கார் ஏற்றி வாலிபர் கொலை- ஓராண்டுக்கு பிறகு 4 பேர் கைது
- பிட்ஷாபதி பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்கு ஸ்ரீகாந்த் மனு செய்தார்.
- பிட்ஷாபதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், சென்னரா பேட்டை, போடாதண்டாவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்.
இவர் ஐதராபாத் பாச்சுப்பள்ளியில் ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் போலியாக வேலைவாய்ப்புகளை உருவாக்கினார். வேலைக்கு வருபவர்களின் பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மோசடியாக பணத்தை எடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் குண்டூர் மாவட்டம், நர்சம்பேட்டை, குருஜால பகுதியை சேர்ந்தவர் பிட்ஷாபதி. இவர் ஸ்ரீகாந்திடம், எனக்கு பெற்றோர், உறவினர்கள் யாரும் இல்லாத அனாதையாக இருக்கிறேன்.
எனக்கு வேலை கொடுங்கள் என கேட்டார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஸ்ரீகாந்த் பிட்ஷாபதியை வேலைக்கு சேர்த்தார்.
இதையடுத்து பிட்ஷாபதி பெயரில் ரூ 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்தார். அதில் தனது பெயரை நாமினியாக சேர்த்துக் கொண்டார். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கி பிட்ஷாபதி பெயரில் ரூ.52 லட்சம் கடன் பெற்று அவரது பெயரிலேயே மெடிபள்ளியில் வீடு வாங்கினார். இந்த நிலையில் ஸ்ரீ காந்த்திற்கு திடீரென பண தேவை ஏற்பட்டது. பிட்ஷாபதி பெயரில் வாங்கிய வீட்டை விற்க முடிவு செய்து அவரிடம் தெரிவித்தார். இதற்கு பிட்ஷாபதி மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் பிட்ஷாபதி பெயரில் உள்ள வீடு மற்றும் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் காவலாளி மோதிலாலை அணுகி பிட்ஷாபதியை கொலை செய்ய உதவி செய்தால் ரூ.10 லட்சம் தருவதாக தெரிவித்தார். மேலும் அவரது நண்பர்களான சம்மண்ணா, சதீஷ் ஆகியோருக்கு தலா ரூ.5 லட்சம் தருவதாகவும் கூறினார்.
இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி பிட்ஷாபதியை மொகிலி கிடா புறநகர் பகுதிக்கு காரில் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து பிட்ஷாபதியை அதிக அளவில் மதுவை குடிக்க வைத்தனர்.
பின்னர் 3 பேரும் சேர்ந்து ஹாக்கி மட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பிட்ஷாபதியை ரோட்டில் இழுத்து போட்டு அவர் மீது 3 முறை காரை ஏற்றி கொலை செய்தனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஷாட் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு விபத்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் பிட்ஷாபதி பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்கு ஸ்ரீகாந்த் மனு செய்தார். பிட்ஷாபதி சாவில் சந்தேகம் இருப்பதாக இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் மீண்டும் பிட்ஷாபதி வழக்கை விசாரணை செய்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அவரை காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீகாந்த் அவருக்கு உடந்தையாக இருந்த மோதிலால், சம்மண்ணா, சதீஷ் ஆகிய 4 பேரை கொலை நடந்த ஓராண்டுக்கு பிறகு கைது செய்தனர்.