இந்தியா

அரசு ஊழியர்கள், ஓய்வூதியத்தாரர்களுக்கு பணமில்லா மருத்தவப் பயன் திட்டம்- உ.பி முதல்வர் தொடங்கி வைத்தார்

Published On 2022-07-22 04:31 GMT   |   Update On 2022-07-22 04:31 GMT
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.
  • கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படுகிறது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 22 லட்சம் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் உட்பட 75 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பணமில்லா மருத்துவ வசதி வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

தீன் தயாள் உபாத்யாயா அரசு ஊழியர்களுக்கான பணமில்லா மருத்துவத் திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள தகுதியானவர்கள் எந்தவித நிதி வரம்பும் இல்லாமல் பணமில்லா மருத்துவ வசதிகளைப் பெறுவார்கள்.

மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.

இத்திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தீன் தயாள் உபாத்யாயா அரசு ஊழியர்களுக்கான பணமில்லா மருத்துவத் திட்டத்தின் கீழ், தகுதியான பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மாநில சுகாதார அட்டை வழங்கப்படும்.

மாநில சுகாதார அட்டையை தாங்களாகவே பதிவிறக்கம் செய்து, அரசு அல்லது எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவச் சிகிச்சையின் பலனைப் பெறும் வகையில் செயல் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

மாநிலத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களுக்கு முக்யமந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.

மேலும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படுகிறது.

தனது முந்தைய ஆட்சிக் காலத்திலேயே, மாநில அரசு ஊழியர்களுக்கு ரொக்கமில்லா மருத்துவ வசதிகளை வழங்குவதற்கான செயல் திட்டத்தைத் தயாரிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு தனது அரசு அறிவுறுத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News