இந்தியா

பெங்களூரில் கடும் போக்குவரத்து நெரிசல்- 1 கிலோ மீட்டரை கடக்க 2 மணி நேரம் ஆனது

Published On 2023-09-28 22:24 IST   |   Update On 2023-09-28 22:24:00 IST
  • அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப சுமார் 5 மணிநேரம் ஆனதாக பலர் தெரிவித்தனர்.
  • சில பள்ளி பஸ்கள் இரவு 8 மணிக்கே மாணவ-மாணவிகளை வீடுகளில் இறக்கி விட்டுள்ளன.

பெங்களூரில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மதியத்துக்கு பிறகு சாலைகளில் வாகனங்களில் சென்றவர்கள் கடுமையான சிரமத்திற்குள்ளானார்கள். போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரமாக வாகனங்கள் சாலைகளில் சிக்கி திணறின.

சுமார் 5 மணிநேரத்துக்கு மேலாகவும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப சுமார் 5 மணிநேரம் ஆனதாக பலர் தெரிவித்தனர்.

பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. அலுவலகத்துக்கு சென்றவர்களும், வீடுகளுக்கு சென்றவர்களும் பல மணி நேரம் சாலையிலேயே தவித்தனர். 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆனதாக வாகன ஓட்டிகள் கூறினர்.

இதனால் வேலைக்கு சென்றவர்கள் இரவு 9 மணிக்கு முன்பு அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், வெளி வட்ட சாலை, மாரத்த ஹள்ளி, சர்ஜபுரா மற்றும் சில்க் போர்டு சாலைகளை பயன் படுத்த வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதே போல் பள்ளிக் குழந்தைகள் மாலையில் பள்ளி முடித்து வீடு திரும்புவதிலும் அதிக தாமதம் ஏற்பட்டது. சில பள்ளி பஸ்கள் இரவு 8 மணிக்கே மாணவ-மாணவிகளை வீடுகளில் இறக்கி விட்டுள்ளன.

பெல்லந்தூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் நடைபாதையிலேயே சென்றன. இதனால் பொது மக்கள் நடந்து செல்லக் கூட முடியவில்லை.

பெங்களூர் வெளி வட்ட சாலையில் நகைச்சுவை நடிகர் டிரேவர் நோவா பங்கேற்ற நிகழ்ச்சி நடை பெறுவதாக இருந்தது. அவரது நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய பலர் தங்கள் அலுவலகங்களை விட்டு சீக்கிரமே கிளம்பினர். டிரேவர் நோவாவும் நெரிசலில் சிக்கினார். இதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வெளிவட்ட சாலை வழியாக சென்றதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் தொடர் விடுமுறை காரணமாக பலர் வெளியிங்களுக்கு வாகனங்களில் சென்றனர். பல இடங்களில் வாகனங்கள் பழுதடைந்து சாலைகளில் நின்றன. பெரும்பாலான பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. பல சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

மேலும் வழக்கமாக சாலையில் 1½ லட்சம் முதல் 2 லட்சம் வாகனங்கள் செல்லும். நேற்று 3.59 லட்சம் வாகனங்கள் சென்றன. இதனால் பெங்களூரு நகரம் நேற்று கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News