இந்தியா

பிரதமர் வரவேற்பை மீண்டும் புறக்கணித்த சந்திரசேகர ராவ்

Update: 2022-07-02 04:57 GMT
  • மரபுபடி பிரதமர் வருகையின் போது அவரை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் வரவேற்பது வழக்கம்.
  • ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரியும் , தெலுங்கானா ராஷ்ட்ரிய தலைவருமான சந்திரசேகர ராவ் பிரதமர் வருகையை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார்.

ஐதராபாத்:

வட மாநிலங்களில் வலுவாக உள்ள பா.ஜனதா தற்போது தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கால் பதிக்கும் வகையில் காய் நகர்த்தி வருகிறது. இதனால் பாரதிய தேசிய செயற்குழு கூட்டத்தை அக்கட்சி ஐதராபாத்தில் நடத்துகிறது.

இன்றும் நாளையும் பிரமாண்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதா ஆளும் மாநிலத்தை சேர்ந்த 18 முதல்-மந்திரிகள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இன்று காலை ஐதராபாத்தில் உள்ள சர்வதேச மாநாட்டு திடலில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதனை ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். இதில் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டது. மேலும் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பாரதிய ஜனதா செயல்பாடுகள் குறித்தும், வெற்றி வியூகம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

செயற்குழு கூட்டத்தையொட்டி நாளை (3-ந்தேதி) பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தையொட்டி ஐதராபாத் நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. மோடியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் சாதனை குறித்த சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன , பிரதமர் வருகையையொட்டி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் பேகம்பேட்டை விமான நிலையம் வருகிறார்.

மரபுபடி பிரதமர் வருகையின் போது அவரை அந்தந்த மாநில முதல்-மந்திரி கள் வரவேற்பது வழக்கம்.

ஆனால் தெலுங்கானா முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் பிரதமர் வரவேற்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளார். அவருக்கு பதிலாக அம்மாநில மந்திரி மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்க மட்டுமே செல்கின்றனர்.

ஆனால் பிரதமர் வருகைக்கு முன்பாக அதே விமான நிலையத்துக்கு வந்த எதிர்கட்சி ஐனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை சந்திரசேகர ராவ் மற்றும் அம்மாநில மந்திரிகள் வரவேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேசிய அளவில் மோடிக்கு எதிராக 3-வது அணி அமைத்து எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலின் போது பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக அவர் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் தனது சொந்த மாநிலத்திற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க செல்ல மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 6 மாதங்களில் பிரதமர் மோடி வருகையை சந்திரசேகர ராவ் 3-வது முறையாக புறக்கணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News