சபரிமலையில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்- தேவசம்போர்டு தகவல்
- வருகிற 15-ந்தேதி மண்டல பூஜை வழிபாட்டுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
- பயணம் தாமதமானால் 24 மணி நேரம் (திட்டமிட்ட நேரத்திற்கு முன் அல்லது பின்) சலுகை காலம் வழங்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர்களுக்காக பல்வேறு வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.
பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது சபரிமலை வரும் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
வருகிற 15-ந்தேதி மண்டல பூஜை வழிபாட்டுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. இந்த கால கட்டங்களில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும் என்பதால் அதற்கான முன்னேற்படுகளை தேவசம்போர்டு தற்போதே செய்து வருகிறது.
ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்து விட்டு தாமதமாக பக்தர்கள் வந்தாலும் அவர்களது அறை பறிபோகாது. இதற்காக பம்பையில் சிறப்பு செக்-இன் கவுண்டர் திறக்கப்படுவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பயணம் தாமதமானால் 24 மணி நேரம் (திட்டமிட்ட நேரத்திற்கு முன் அல்லது பின்) சலுகை காலம் வழங்கப்படும்.
இதேபோல் ஆன்லைன் முன்பதிவில் பிரசாத முன்பதிவும் இடம் பெறும். ஆன்லைன் முன்பதிவு திரும்ப பெறப்பட்டாலும் பிரசாத முன்பதிவுகள் பாதிக்கப்படாமல் இருக்கும். ஒரு பிரசாதம் முன்பதிவு ரத்து செய்யப்பட்டால், அந்த நபரின் வங்கி கணக்கில் நேரடியாக தொகை திரும்ப அளிக்கப்படும்.
பக்தர்கள் குடிநீர் தேவைக்காக 3 ஆயிரம் ஸ்டீல் பாட்டில்களை நன்கொடையாளர்கள் மூலம் விநியோகிக்கவும் பம்பையில் உள்ள கவுண்டரில் ரூ.100 செலுத்தி குடிநீர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. மலையில் இருந்து இறங்கிய பிறகு பக்தர்கள் பாட்டில்களை திரும்ப கொடுத்துவிட்டு வைப்புத் தொகையை திரும்ப பெறலாம் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.