இந்தியா

பாராளுமன்றத்தில் பதிலளிக்க வாய்ப்பு கேட்டு சபாநாயகருக்கு ராகுல் காந்தி மீண்டும் கடிதம்

Published On 2023-03-22 08:11 GMT   |   Update On 2023-03-22 08:11 GMT
  • தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.
  • ஆளும் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

புதுடெல்லி:

ராகுல்காந்தி சமீபத்தில் லண்டன் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு பா.ஜனதா குற்றம் சாட்டியது.

எனவே ராகுல்காந்தி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வலியுறுத்தி வருகின்றனர்.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை பாராளுமன்றத்தை செயல்பட விடமாட்டோம் என்று பா.ஜனதா தெரிவித்து உள்ளது. இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி உள்ளது.

இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல்காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மக்களவையில் மூத்த அமைச்சர்கள் என் மீது முன்வைத்த அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பளிக்குமாறு நான் ஏற்கனவே கடந்த 17-ந்தேதி தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். மீண்டும் அதே கோரிக்கையை முன் வைக்கிறேன்.

பாராளுமன்ற நடைமுறையின் கீழ் உள்ள சட்ட பிரிவு 357, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்குகிறது. சபாநாயகரின் அனுமதியுடன் இந்த சட்ட பிரிவின் கீழ் உறுப்பினர் ஒருவர் பதில் அளிக்க முடியும்.

ஆளும் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இதுபோன்ற சூழலில் சட்டபிரிவு 357-ன் கீழ் தன்னிலை விளக்கம் அளிப்பது தான் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News