இந்தியா

எல்.முருகன் வீட்டில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாடினார்

Published On 2024-01-14 12:01 IST   |   Update On 2024-01-14 12:25:00 IST
  • தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான பிரமாண்டமாக வண்ணக் கோலம் போடப்பட்டிருந்தது.
  • தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுடெல்லி:

தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டில் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.

பொங்கல் விழாவையொட்டி மத்திய மந்திரி எல்.முருகன் வீடு கிராமத்தை போல் களை கட்டி இருந்தது. சுற்றிலும் கரும்பு, மஞ்சள், வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.

கிராமத்து குடிசை வீட்டை தத்ரூபமாக அமைத்து இருந்தனர். வீட்டின் முன் பசு மாடு கட்டப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு காளையும் கட்டப்பட்டு இருந்தது.

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான பிரமாண்டமாக வண்ணக்கோலம் போடப்பட்டிருந்தது.

வீட்டு வாசலில் புதிய மண்பானையில் மத்திய மந்திரி எல்.முருகனும் அவரது மனைவியும் பொங்கல் வைத்தனர். பொங்கல் பானை பொங்கியதும் பெண்கள் குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக குரல் எழுப்பினார்கள்.


தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த கலை நிகழ்ச்சிகளில் கை தேர்ந்த கலைஞர்கள் தங்களது திறமையை காட்டி கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதனை பிரதமர் மோடி மிகுந்த ஆர்வத்தோடு கண்டு ரசித்தார்.

பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றார். இந்த பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு மத்திய மந்திரி எல்.முருகன், தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை ஏற்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ், ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணி, தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், நடிகை மீனா மற்றும் தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

டெல்லியில் கடந்த ஆண்டும் மத்திய மந்திரி எல்.முருகன், வீட்டில் பொங்கல் விழா நடைபெற்றது. அந்த விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார்.

2-வது ஆண்டாக இன்று நடைபெற்ற பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News