குஜராத்தில் ரூ.60 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்- பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
- பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி செல்கிறார்.
- வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
காந்தி நகர்:
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.45 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றார். அங்கு கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன் விழா கொண்டாடத்தில் அவர் பங்கேற்றார்.
இதை தொடர்ந்து மெஹ்சானா, நவ்சாரில் நடைபெறும் 2 பொது நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொள்கிறார். மெஹ்சானாவில் வாலிநாத் மகாதேவ் கோவிலில் தரிசனம் செய்கிறார்.
மெஹ்சானாவில் பிற்பகலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13,500 கோடிக்கு அதிகமான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மாலை 4.15 மணியளவில் பிரதமர் மோடி நவ்சாரி செல்கிறார். அங்கு சுமார் ரூ.47,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
வதோதரா-மும்பை விரைவு சாலை, பாரத் நெட் இரண்டாம் கட்ட திட்டத்தின் முக்கிய பகுதிகளையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மாலை 6.15 மணியளவில் கக்ரபார் அனல்மின் நிலையத்தை பார்வையிடுகிறார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி செல்கிறார். அங்கு உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்வதந்திர சபாகரில் சன்சத் சமஸ்கிருத பிரதியோகிதா வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்குகிறார். துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் பூஜை செய்து தரிசனம் செய்கிறார்.
காலை 11.30 மணியளவில், துறவி குரு ரவிதாஸின் 647-வது பிறந்த நாளை நினைவு கூறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். பிற்பகல் 1.45 மணிக்கு வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.