இந்தியா

டிரீம் சிட்டி திட்டம் முடிந்ததும் சூரத் பாதுகாப்பான, வசதியான வைர வர்த்தக மையமாக உருவெடுக்க உதவும்- பிரதமர் மோடி

Update: 2022-09-29 08:48 GMT
  • சூரத்தில் இருந்து பாவ் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
  • கடந்த 20 ஆண்டுகளில் சூரத் அபரிமிதமாக முன்னேறியுள்ளது.

பிரதமர் மோடி இன்று 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். சூரத் விமான நிலையத்தில் மோடியை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் வரவேற்றார்.

பின்னர் மோடி, சூரத்தில் ரோடுஷோ நடத்தினார். கோதாதர பகுதியில் இருந்து லிம்பயத் வரை காரில் இருந்தபடி சாலையின் இரு புறமும் திரண்டிருந்த மக்களுக்கு கையசைத்து சென்றார். அப்போது மோடியை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இதையடுத்து, குஜராத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த பல திட்டங்களை தொடக்கிவைத்த பின்னர் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், கடந்த 20 ஆண்டுகளில் சூரத் அபரிமிதமாக முன்னேறியுள்ளது என்றார்.

மேலும் அவர் பேசியதாவது:-

வைர ஆராய்ச்சி மற்றும் வணிக (டிரீம்) நகரத் திட்டம் முடிந்ததும், சூரத் உலகின் பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக உருவெடுக்கும்.

நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, இங்கு விமான நிலையத்தின் அவசியத்தை அப்போதைய மத்திய அரசிடம் விளக்கி அலுத்துவிட்டோம். இப்போது, ​​இங்குள்ள விமான நிலையத்திலிருந்து பலர் வந்து செல்வது நகரத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இது இரட்டை இயந்திர அரசாங்கத்தின் பலன்.

சூரத்தின் வைரம் மற்றும் ஜவுளித் தொழிலை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. டிரீம் சிட்டி திட்டம் நிறைவடைந்தவுடன் உலகின் பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக சூரத் உருவெடுக்கும்.

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நான்கு கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 32 லட்சம் பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இதில் சூரத்தில் இருந்து 1.25 லட்சம் பேர் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து, இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் நவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார்.

நாளை காலை காந்திநகர்- மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை காந்திநகர் ரெயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Tags:    

Similar News