இந்தியா

அம்பேத்கர் இல்லாவிட்டால் பிரதமராகி இருக்க மாட்டேன்- பிரதமர் மோடி பேச்சு

Published On 2024-04-16 10:08 GMT   |   Update On 2024-04-16 10:36 GMT
  • கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது பற்றி பெரிய அளவில் பேசப்படவில்லை. விவாதிக்கப்படவும் இல்லை.
  • 70 வயது நிரம்பியவர்களுக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் காப்பீடு திட்டம் வழங்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்.

கயா:

பீகார் மாநிலம் கயாவில் இன்று நடந்த பாரதிய ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நமது அரசியலமைப்புச் சட்டம் தூய்மையானது. இந்தியா வளமானதாக மாற வேண்டும் என அரசியலமைப்பை உருவாக்கியவர் கனவு கண்டார். ஆனால் நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி அந்த வாய்ப்பை இழந்தது. நாட்டை ஆண்ட காங்கிரஸ் நேரத்தை வீணடித்து விட்டது.

அம்பேத்கரின் அரசியலமைப்பு சாசனம் இல்லாவிட்டால் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்த ஏழை பிரதமராகி இருக்க முடியாது. பொதுமக்களின் ஆசி, சேவை, நாட்டின் அரசியல் சாசனம் எனக்கு இந்த பதவியை வழங்கி உள்ளது. அரசியலமைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஒரு புரட்சி நடந்துள்ளது. அது பற்றி பெரிய அளவில் பேசப்படவில்லை. விவாதிக்கப்படவும் இல்லை. நாட்டில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன் வழங்கப்படும்.

70 வயது நிரம்பியவர்களுக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் காப்பீடு திட்டம் வழங்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்.

பீகாரில் பல ஆண்டுகளாக ஆட்சி நடத்திய ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஏழைகளை கொள்ளையடிக்கும் கட்சியாக இருந்தது. அந்த ஆட்சியில் ஊழல் செய்வதே ஒரு தொழில் போல எங்கும் பரவி இருந்தது. அந்த ஆட்சி பீகாருக்கு கொடுத்தது இரண்டு தான். ஒன்று காட்டாட்சி, மற்றொன்று ஊழல். காங்கிரசும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் சமூக நீதி என்ற பெயரில் அரசியல் செய்து வருகின்றன. சிம்னி விளக்கு மூலம் செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற முடியுமா? இந்த தேர்தல் பரந்த பாரதம், பரந்த பீகாருக்காக நடத்தப்படுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News