இந்தியா

முலாயம் சிங் யாதவ் உடல் முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம்

Published On 2022-10-11 11:28 GMT   |   Update On 2022-10-11 11:28 GMT
  • பிற்பகல் 3 மணியளவில் முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு சொந்த ஊரிலேயே நடைபெற்றது.
  • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக அரியானா குருகிராமில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை மரணம் அடைந்தார்.

இதையடுத்து முலாயம் சிங் யாதவ் உடல் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டம் சைபைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முலாயம் சிங் யாதவ் மறைவை கேள்விப்பட்டதும் மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான சமாஜ் வாடி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சைபை கிராமத்தில் திரண்டனர்.

அவர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து முலாயம் சிங் யாதவ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விடிய விடிய காத்திருந்து அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சிலர் துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் முலாயம் சிங் யாதவின் இறுதி சடங்கு சொந்த ஊரிலேயே நடைபெற்றது. பின்னர், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், அவரது தயாரும் சமாஜவாதி எம்.பி.யுமான ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News