இந்தியா

குஜராத் விபத்து எதிரொலி: முதல்-மந்திரி பூபேந்திர படேல் ராஜினாமா செய்ய வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2022-11-01 12:49 IST   |   Update On 2022-11-01 12:49:00 IST
  • விபத்திற்கு தார்மிக பொறுப்பேற்று குஜராத் முதல்-மந்திரி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும்.
  • பாலத்தில் இவ்வளவு பேரை அனுமதித்தது ஏன்? இதற்கு காரணமான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்.

மோர்பி:

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானது. இதில் 141 பேர் பலியானார்கள்.

மோர்பி பகுதியில் விபத்து நடந்த இடத்தை காங்கிரஸ் குழுவினர் நேற்று பார்வையிட்டனர். ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அப்போது இந்த விபத்து எதிரொலியாக குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு அரசியல் செய்ய விருப்பமில்லை. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை மாலை பாலம் அறுந்து விழுந்த போது பா.ஜனதா மந்திரிகள், எம்.பி.க்கள், கலெக்டர் மற்றும் மோர்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அருகில் உள்ள இடத்தில் கூட்டம் நடத்தி கொண்டு இருந்ததை அறிந்தேன். அவர்கள் கூட்டத்தை நிறுத்தவில்லை.

அதிகாரிகளிடம் இருந்து எந்தவித சான்றிதழும் பெறாமல் பாலம் எப்படி பொது மக்களுக்காக திறக்கப்பட்டது.

இது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல. அரசால் உருவாக்கப்பட்ட சோகமாகும். இதற்கு தார்மிக பொறுப்பேற்று குஜராத் முதல்-மந்திரி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும். பாலத்தில் இவ்வளவு பேரை அனுமதித்தது ஏன்? இதற்கு காரணமான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு திக்விஜய் சிங் தெரிவித்தார்.

Tags:    

Similar News