இந்தியா

கோவிலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபரை கன்னத்தில் அறைந்த பக்தர்- பயங்கரவாத தடுப்பு ஒத்திகையில் பரபரப்பு

Published On 2023-08-09 06:07 GMT   |   Update On 2023-08-09 06:07 GMT
  • கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர்.
  • துப்பாக்கியுடன் இருந்த நபர், வாலிபர் ஒருவரை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்தார்.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் முகத்தை துணியால் மூடி இருந்தார். அதை பார்த்ததும் கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர்.

துப்பாக்கியுடன் இருந்த நபர், வாலிபர் ஒருவரை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்தார். இதனால் கோவிலுக்குள் பயங்கரவாதி புகுந்து விட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது கோவிலில் இருந்த பக்தர் ஒருவர், துப்பாக்கியுடன் இருந்த நபரை நோக்கி சென்றார். அவர், முகமுடி அணிந்திருந்த நபரின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.

அப்போது, தான் பயங்கரவாதி அல்ல போலீஸ்காரர் என்றும், இது பயங்கரவாத தடுப்பு தொடர்பாக போலீசாரின் ஒத்திகை என்றும் துப்பாக்கியுடன் இருந்த நபர் தெரிவித்தார். பிணைக் கைதியாக இருந்த வரும் போலீஸ்காரர் ஆவார். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்திகைக்காக போலீஸ்காரர் துப்பாக்கியுடன் பயங்கரவாதி போல் மாறு வேடத்தில் கோவிலுக்குள் நுழைந்தது தெரிய வந்தது.

மேலும் போலீஸ்காரர் கன்னத்தில் அறைந்தவர் பிரசாந்த் குல்கர்னி என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பலர் அதிருப்தி தெரிவித்தனர். பொதுமக்கள், குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் இது போன்ற ஒத்திகைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.

Tags:    

Similar News